Skip to main content

“ஊழலிலும், குடும்ப ஆட்சியிலும் நம் முதல்வர் நம்பர் ஒன்” - அண்ணாமலை

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

annamalai talks about dmk party in covai bjp meeting 

 

கோவை மேட்டுப்பாளையத்தில் பாஜகவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார்.

 

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “இந்தியா முழுவதும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. உலக நாடுகளில் பொருளாதாரம் தேங்கி இருக்கும் நிலையில், ஏழு சதவிகிதம் வளர்ச்சி விகிதத்தோடு மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் இந்தியா இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரிய நகரங்கள் எல்லாம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டு இருக்கின்றன. ஆனால், இன்று கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி ஆகிய பகுதிகளைத் திரும்பிப் பார்க்கும் போது உண்மையாகவே வளரவே இல்லை என்று சொல்லுவேன். நிறைய உதாரணங்கள் சொல்லலாம்.

 

சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆகுகிறது. ஆனால், கூடலூரில் இருப்பவர்களுக்கு ஒரு மருத்துவமனை வசதி கூட இல்லை. தற்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ள 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒரு கல்லூரி தற்போது நீலகிரிக்கு வந்திருக்கிறது. என்னதான் மத்திய அரசு வாரிக் கொடுத்தாலும், அதனைக் கொண்டுவந்து நம் மக்களுக்கு சேவை செய்ய ஒரு மக்கள் சேவகன் நமக்கு தேவை. நீலகிரி எம்.பி.யான ஆ.ராசாவின் பினாமி பெயரில் வாங்கப்பட்ட 55 கோடி ரூபாய் சொத்தினை நமது அமலாக்கத்துறையினர் ஜப்தி செய்து உள்ளனர். நீலகிரியில் உள்ள பிரச்சனைக்கு எந்தவிதமான தீர்வும் கிடைப்பதில்லை.

 

இந்தப் பகுதியில், அரசின் ‘டேன் டீ’ பிரச்சனையின் போது கூடலூரில் மத்திய அமைச்சர் முருகன் போராட்டம் செய்து, 24,000 பேரின் வேலையைப் பாதுகாத்தார். நீலகிரி ஒரு மிக முக்கியமான பாராளுமன்றத் தொகுதி. நீலகிரிக்கு உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து அனைத்து விதமான தொழில் வளர்ச்சியையும் கொண்டு வர வேண்டும். கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி கம்யூனிஸ்ட் எம்.பி. தொழிற்சாலை, தண்ணீர், ரோடு என எது வந்தாலும் வேண்டாம் என்றுதான் சொல்லுவார்.

 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மிகவும் புறக்கணிக்கப்பட்ட பகுதி கொங்கு பகுதி. கொரோனா தடுப்பூசி வழங்குவதில் கூட அரசியல் செய்தனர். கொங்கு பகுதிக்கு குறைவான அளவே கொரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டது என்றும் கூட சொல்லலாம். இன்றைக்கு தமிழகத்தில் எங்கெல்லாமோ நிலங்கள் இருக்கின்றன. ஆனால், அதை எல்லாம் விட்டு விட்டு அன்னுரில் உள்ள 3400 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த நினைத்தது. அதை பாஜக தற்போது போராட்டம் நடத்தி நிறுத்தி வைத்து உள்ளது. இங்கு இருந்து எதை எடுத்துச் செல்லலாம் என்று திமுக நினைக்கிறது.

 

திமுக ஆட்சி பட்டத்து இளவரசருக்கான ஆட்சி. உதயநிதி ஸ்டாலின் கோவை வந்திருந்த போது நேரு அரங்கில் மூன்று மணி நேரம் குழந்தைகள் காக்கவைக்கப்பட்டனர். கோயம்புத்தூர் முழுவதும் சாலைகளில் நெரிசல். நடந்து செல்லக் கூட முடியவில்லை.

 

கடந்த ஆண்டு பொங்கல் தொகுப்பை ஆடம்பரமாகக் கொடுத்த திமுக அரசு இந்த வருடம் அரிசியையும், சர்க்கரையையும் கொடுத்து பொங்கல் வைத்து கொள்ளுங்கள் என்று சொல்கிறது. தேர்தல் வாக்குறுதியில் பனை வெல்லத்தைக் கொடுப்போம் என்று சொன்ன அரசு கொடுக்கவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் போது 5000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுப்போம் என்றவர்கள், ஆளும் கட்சியான பிறகு 1000 ரூபாயைத் தருகிறார்கள். பொய் சொல்வதில், ஊழல் செய்வதில், குடும்ப ஆட்சி செய்வதில், மக்களை ஏமாற்றுவதில் நம்முடைய முதலமைச்சர் நம்பர் ஒன்” என்று பேசினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்