தென் சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து நேற்று அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.
அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை காட்டமாக விமர்சித்தார். அவர் பேசுகையில், திமுக கூட்டணியில் நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறார் ஸ்டாலின், திமுகவினர் தனி நபர் விமர்சனங்களை மோசமாகச் செய்து வருகிறார்கள். ஸ்டாலின் தற்போது என்னைப் பற்றியும், எங்கள் நிறுவனர் ராமதாஸ் குறித்தும், முதல்வர் குறித்தும், பிரதமர் குறித்தும் மிக மோசமான, கொச்சையான வார்த்தைகளில் பேசி வருகிறார்.
ஸ்டாலின் மட்டுமல்ல, அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும், கீழ்த்தரமான அதாவது தெருப்பேச்சாளர் பேசுவது போன்று பேசுகிறார். நான் ஸ்டாலினுக்கு ஒரு சவால் விடுகிறேன். நீங்கள் மேடையைப் போடுங்கள், நான் வருகிறேன். நீங்கள் வாருங்கள் அல்லது உங்கள் மகன் உதயநிதி ஸ்டாலினை அனுப்புங்கள். நாம் தமிழ்நாட்டின் நலன், தமிழ்நாட்டின் திட்டங்களைப் பற்றி விவாதம் செய்யலாம். நீங்கள் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள். நானும் பதில் சொல்கிறேன். நான் விவாதத்துக்குத் தயார், நீங்கள் தயாரா?'' என சவால் விட்டிருந்தார்.
தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த உதயநிதி ஸ்டாலினிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார், நான் சவாலை ஏற்கிறேன். அன்புமணியே கூட்டத்தைப் போடட்டும், நானே வருகிறேன். முதலில் எட்டுவழிச்சாலை திட்டம் குறித்து விவாதிக்கலாம்.
என்ன செய்யப்போகிறார் அன்புமணி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என அரசியல் வட்டாரத்திலிருப்பவர்கள் கூறியுள்ளனர்.