நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மற்றும் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து இன்று (15-04-24) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடசென்னையில் வாக்கு சேகரித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடி வீட்டுக்கும் கேடு, நாட்டுக்கும் கேடு. நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா? அல்லது சர்வாதிகாரம் இருக்க வேண்டுமா? என்பதை மக்களின் முடிவு தான் தீர்மானிக்கும். ஓர் இரவில் ஊழலை ஒழிக்க போவதாக அவதார புருஷராக தோன்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மோடி அறிவித்தார். ஜிஎஸ்டியை அமல்படுத்தி தொழில் முனைவோரையும் மத்திய தர மக்களையும் மோடி கொடுமைப்படுத்தினார்.
கொரோனாவை ஒழிக்க, இரவில் விளக்கு ஏற்ற கூறியும், மணி அடிக்க கூறியும் ஏதோ விஞ்ஞானி போல் மோடி பேசினார். பாஜக தேர்தல் அறிக்கை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் வில்லன். நாட்டுக்கு வரப்போகும் ஆபத்துக்கான ட்ரெய்லர் தான் பாஜகவின் தேர்தல் அறிக்கை. பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது. மத அடிப்படையில் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது” எனக் கூறி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான வீடியோவை அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு செய்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இரவில் டி.வி. முன் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை! பிரதமராக தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தைத் தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும், தம் பதவியின் தரத்தையே தாழ்த்துகிறார். ஒருவர் உண்ணும் உணவு பற்றிப் புகார்கூறி வாக்கு சேகரிக்கும் மலிவான செயல் இதுவரை எந்தப் பிரதமரும் செய்யாதது! அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? ஆர்.எஸ்.எஸ் சொல்லும் சட்டம் இருக்க வேண்டுமா? என்பதை முடிவுசெய்யும் தேர்தல் இது. இந்தியாவில் மதநல்லிணக்கம் நீடிக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.