அமைச்சரவையில் இரண்டு கட்சிகளுக்கும் பாதிப்பாதி இடங்கள் ஒதுக்கப்படும் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக மே 24ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த மேடையில் பதவியேற்றார் ம.த.ஜ. தலைவர் குமாரசாமி. என்னதான் முதல்வராக பதவியேற்றாலும், இந்தப் பதவி காங்கிரஸின் ஆசிர்வாதத்தாலேயே தனக்குக் கிடைத்ததாக வெளிப்படையாக அறிவித்தார் அவர்.
முதல்வராக குமாரசாமி பொறுப்பேற்று ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில், இன்னமும் அங்கு அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை. கூட்டணியில் அதிக எண்ணிக்கையிலான எம்.எல்.ஏ.க்களை வைத்திருக்கும் காங்கிரஸ், நிதித்துறை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களை கோருவதால் இழுபறி நிகழ்வதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், எல்லாம் சுமூகமாகவே முடியும் என நம்பிக்கை தெரிவித்தார் குமாரசாமி.
இந்நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பேசிய குமாரசாமி, அமைச்சரவையில் பாதிக்கு பாதி இடங்களை இரு கட்சிகளும் பகிர்ந்துகொள்ளப்போவதாகவும், இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அனுமதி தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகே விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யமுடியும் என்பதால், கூடிய விரைவில் அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய திட்டமிட்டிருக்கிறார் குமாரசாமி.