இஃப்தார் விருந்து குறித்து அவதூறாக பேசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
![RajaSingh](http://image.nakkheeran.in/cdn/farfuture/zOTC2Dm_ilJfWz6jz8O9vXc20BrC8LB6m-CVROI5iKI/1533347632/sites/default/files/inline-images/Raja_0.jpg)
தெலுங்கானா மாநிலம் கோஷாமகால் தொகுதியைச் சேர்ந்தவர் ராஜா சிங். பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதில் பெயர்போனவர். இஸ்லாமியர்கள் தங்களது புனித பண்டிகையான ரம்ஜானுக்காக நோன்பு கடைபிடித்து, ஒவ்வொரு நாளும் இஃப்தார் விருந்து வைப்பது வழக்கம். இந்த இஃப்தார் விருந்தை மதம் உள்ளிட்ட பிரிவினைகள் கடந்து பலரும் அனுசரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய எம்.எல்.ஏ. ராஜாசிங் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘ஓட்டுக்காக பிச்சை எடுக்கும் தலைவர்கள்தான் இஃப்தார் விருந்தினை நடத்துகிறார்கள். அதனால், இதுபோன்ற விழாக்களில் நான் கலந்துகொள்வதில்லை. தெலுங்கானா ராஷ்டிர சமிதி போன்ற கட்சிகள் இதுபோன்ற விருந்துகளில் பிஸியாக இருக்கின்றன’ என தெரிவித்தார். மேலும், குரான் பற்றி பேசிய அவர், ‘அந்த பச்சை புத்தகம் நாடு முழுவதும் தீவிரவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதை முழுவதுமாக தடை செய்யவேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர்மீது ஃபலக்நாமா காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரை ஏற்ற காவல்துறையினர் ராஜாசிங் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.