கடலூர் மாவட்டத்தில் நேற்று (02-04-24) மாலை பாஜக தலைமையிலான பாமக வேட்பாளர் தங்கர் பச்சானை ஆதரித்து வாக்கு கேட்டு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “கூட்டணியில் எங்களுக்கு 10 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், கடலூருக்கு யாரை தேர்வு செய்யலாம் என்று நினைத்தபோது தகுதியான வேட்பாளர் தங்கர் பச்சான் தான் என்று முடிவு செய்து அவரை நிறுத்தியுள்ளோம். அவர் எழுத்தாளர், சிந்தனையாளர், நேர்மையானவர், நியாயமானவர், கடலூர் மண்ணை உலகுக்கு காட்டியவர் மற்றும் கடலூர் மக்களுக்கு நல்லது செய்யக்கூடியவர்.
உங்களுக்காக டெல்லி வரை சென்று சண்டை போடக்கூடியவர். இவரால் கடலூர் மாவட்டம் வளம் பெறும், வளர்ச்சி பெறும். கடந்த 25 ஆண்டுகளாக தி.மு.க, அ.தி.மு.க என மாறி, மாறி இருந்துள்ளனர். மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கடலூர் சிப் காட்டால் பொதுமக்களுக்கு கேன்சர் ஏற்படுகிறது. இங்குள்ள மக்களின் தாய்ப்பாலில் டயாக்சின் என்ற நச்சுப் பொருள் உள்ளது. இதற்கு பா.ம.க பல போராட்டங்களை தொடர்ந்து நடத்தியுள்ளது. பா.ம.க போராட்டத்துக்கு பிறகுதான் சில வரன்முறைகள் செய்யப்பட்டுள்ளது. தங்கர் பச்சான் இந்த தொகுதியின் பொது வேட்பாளர் அவரை வெற்றி பெற செய்யுங்கள். இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்தாவிட்டால் நாசமாகத்தான் போகும்.
66 ஆண்டுகளாக என்எல்சி கடலூர் மாவட்டத்தை நாசப்படுத்தி வருகிறது. 40 ஆயிரம் ஏக்கரை அழித்தது. 60 ஆயிரம் ஏக்கரை அழிக்க நினைக்கிறது. வேளாண்துறை அமைச்சரே என்.எல்.சிக்கு நிலத்தை கையகப்படுத்தி தருகிறார். என்.எல்.சி நமக்கு பிச்சை போடுகிறது. மண்ணால் சோறு விலைகிறது. மக்களின் அடையாளத்தை அழித்துவிட்டது. வள்ளலார் நமது கடவுள். வடலூர் பெருவெளியில் சர்வதேச மையத்தை கட்டுவதை விட்டு விட்டு சென்னை, கடலூர், வெளிநாட்டில் கட்டுங்கள். தானே புயலின் போது ஓடிவந்தது தங்கர் பச்சான் தான். கடலூர் மருத்துவக்கல்லூரி எங்கே, எப்போது வரும்?. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் விஷ்ணுபிரசாத் எனது மைத்துனர். ஆனால், அவர் ஏன் இங்கு வந்து போட்டியிருகிறார். அங்கு சீட் கிடைக்காததால் இங்கு ஓடி வந்துள்ளார். எனக்கு கட்சி தான் முக்கியம், பிறகு தான் குடும்பம்.
தங்கர் பச்சான் 2 லட்சம் வாக்கு விதியாசத்தில் பெற்றி பெறுவார். அவரை எதிர்ப்பவர்கள், டெபாசிட் இழப்பார்கள். தி.மு.க, அ.தி.மு.க.வை ஒதுக்குங்கள். மாற்றம் வேண்டும். கடலூரில் இருந்து மாற்றத்தை தொடங்குங்கள். தங்கர் பச்சான் சமூக நீதி கருத்தை ஆழமாகக் கொண்டவர். இந்த மண்ணை சேர்ந்தவர். அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்று பேசினார். இந்த பிரச்சார நிகழ்வில், பா.ம.க மாவட்ட செயலாளர் சண்முத்துகிருஷ்ணன், மாநில நிர்வாகி பழ.தாமரைக்கண்ணன் மற்றும் பா.ம.க கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.