அணு ஆயுதங்கள் இல்லாத உலகம் அமைய நீண்டதூரம் பயணிக்க வேண்டிருந்தாலும் இன்றைக்கு அமெரிக்க அதிபரும் வட கொரிய அதிபரும் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை வரவேற்கிறோம் என தெரிவிக்கிறது பூவுலகின் நண்பர்கள் குழு அமைப்பு. இவ்வமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
’’உலகப்புகழ்பெற்ற இயற்பியலாளர் ஸ்டீவன் ஹாக்கிங்ஸ் இந்த உலகத்தை அச்சுறுத்தக்கூடிய மூன்று விசயங்களில் பிரதானமாக கூறியது அணு ஆயுதங்களை. இவ்வுலகத்தில் தற்போது சுமார் 15,000 அணு குண்டுகள் உள்ளன, அவை அனைத்தும் ஹிரோஷிமா-நாகசாகி மீது போடப்பட்ட குண்டுகளை விட பல்லாயிரம் மடங்கு சக்திவாய்ந்தவை. ரஷிய அமெரிக்கா இந்த இருநாடுகள் மட்டும் சுமார் 1,800 அணு ஆயுதங்களை ஆயுத்த நிலையில் நிறுத்தியுள்ளன, சமிக்கைகள் கிடைத்த சில நிமிடங்களுக்குள் இவற்றை ஏவக்கூடிய வகையில் நிலைநிறுத்தியுள்ளன.
உலகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் அணு ஆயுதங்களுக்கு எதிராக செயல்பாடுகளை செய்துவருகின்றன, அவற்றுள் மிகவும் முக்கியமானதாக "ஐகேன்" அமைப்பிற்கு இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது எல்லோரும் அறிந்ததே.
கடந்த பல ஆண்டுகளாகவே வட கொரியா அணு குண்டு சோதனைகளை செய்து "அணு ஆயுத உற்பத்தியில் கவனம் செலுத்திவந்தது உலகத்திலுள்ள பல்வேறு நாடுகளை கவலைக்கு உள்ளாக்கியது. அமெரிக்கா மீது தீரா பகைகொண்ட வடகொரியா அமெரிக்கா மீது அணுஆயுத தாக்குதல் நடத்துவதற்காக அதிகதூரம் செல்லக்கூடிய ஏவுகணைகள் பலவற்றை சோதனைசெய்வதும், அதற்கு பதிலடியாக அமெரிக்கா எப்போதும் தயார் நிலையில் இருப்பதாகவும் மாறி மாறி சொற்போர்கள் நடந்து கொரிய தீபகற்பத்தை கொதிநிலையில் இருக்கவைத்தது.
இந்நிலையில் தென் கொரிய அதிபரின் முயற்சியால் சில மாதங்களுக்கு முன்னர் வட -தென் கொரிய அதிபர்கள் சந்தித்தது, நம்பிக்கை கீற்றை வெளிப்படுத்தியது. இந்நிலையில் சிங்கப்பூர் நாடு, அமெரிக்க அதிபரையும், வட கொரியா இடையேயான உச்சிமாநாட்டை நடத்துவதற்கு சம்மதித்து இன்று இரு நாட்டு அதிபர்களும் சந்தித்தார்கள்.
வட கொரியா மற்றும் அமெரிக்க அதிபர்களிடேயே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாகவும், இரு நாடுகளுக்கிடேயே உள்ள பரஸ்பர நல்லெண்ண உறவுகள் தொடரும் என்று இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த ஒப்பந்தத்தின்படி, வடகொரியா அணு ஆயுதங்கள் முழுவதையும் செயலிழக்க செய்யப்படும் என்று உறுதிமொழி அளித்துள்ளது. அதற்கு, அமெரிக்கா, வட கொரியாவின் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாத்தையும் அளித்துள்ளது. மேலும் இரு நாடுகளுக்கிடேயே இரண்டாம் கட்ட அதிகாரிகள் தொடர்ச்சியாக பேசுவார்த் தைகளில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
வட கொரியா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களையும் அதிதூர ஏவுகணைகளையும் செயலிழக்க ஏற்றுக்கொண்டதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் உலகத்திலேயே அதிக அணுகுண்டுகள் வைத்திருக்கும் அமெரிக்காவும் இது குறித்த நகர்வுகளை அறிவித்திருக்கவேண்டும், அது குறித்த அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது, மேலும் அமெரிக்காவின் "பெரியண்ணன் மனோபாவம்" இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.
அதிகாரபூர்வமாக பார்த்தால் இப்போதும் வட மற்றும் தென் கொரியா நாடுகளிடேயே இப்போது போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, அப்படி உள்ள சூழலிலேயே இரு நாடுகளும் பேசி அணு ஆயுதங்களை செயலிழக்க செய்யவதை உலகம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
அணு ஆயுதங்கள்தான் தேச எல்லைகளை பாதுகாக்கும் என்பதெல்லாம் வழக்கற்றுப்போன வாதங்கள் என்பதை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள துவங்கியுள்ளன. உலகத்திலுள்ள 195 நாடுகளில் 9 நாடுகள் மட்டுமே அணு ஆயுதங்கள் வைத்துள்ளன. அப்படியென்றால் மற்ற 186 நாடுகளை வேறு ஏதாவது நாடு சென்று ஆக்கிரமிக்கிறதா? மற்ற நாடுகள் பாதுகாப்பாகதான் உள்ளன என்கிற உணர்வும் நாடுகளிடேயே உள்ளது.
இதைப்போலவே கூடிய விரைவில் இந்திய நாட்டின் பிரதமரும் பாகிஸ்தான் அதிபரும் சந்தித்து, இரு நாடுகளிடமும் உள்ள அணு ஆயுதங்களை குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும் என்று கோருகிறோம்.
அணுசக்தியும் மானுட சமூகமும் ஒன்றாக வாழமுடியாது என்பதை எல்லா நாடுகளும் நினைவில் கொள்ள வேண்டும். ’’