கடந்த 1987 ஆம் ஆண்டு கல்வி வேலை வாய்ப்பில் தனி இட ஒதுக்கீடு கேட்டு அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசை எதிர்த்து வன்னியர் சமூகத்தினர் பெரும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த 21 பேர் உயிரிழந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் போடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1989-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசு, வன்னியச் சமுதாயத்தினர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டது. மேலும், போராட்டத்தின் போது 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்ட வழக்குகளையும் திமுக அரசு ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, 1996 ஆம் ஆண்டு மீண்டும் திமுக அரசு ஆட்சிக்கு வந்த போது, இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான 21 வன்னியர் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தது.
இதனைத் தொடர்ந்து, இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேருக்கும் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று வன்னியர் சமூக மக்கள் நீண்ட நாளாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு விழுப்புரத்தில் உயிரிழந்த 21 பேருக்கு ரூ.5.4 கோடி மதிப்பில் மணிமண்டபம் கட்டியது. இதனைக் கடந்த 28 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த நிலையில் வன்னியர் சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று 21 பேருக்கும் மணிமண்டபம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சருக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என் ராமமூர்த்தி, காடுவெட்டி மனோஜ் - விருதாம்பிகை ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை தனித்தனியாக சந்தித்து நன்றி தெரிவிக்கவுள்ளனர்.