Skip to main content

“இது இந்தியாவின் ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டிருக்கிற சவால்...”- சு.வெங்கடேசன் 

Published on 04/02/2025 | Edited on 04/02/2025
Su Venkatesan said that this challenge to India's democracy

இந்தாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.  இந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று உரையாற்றினார். பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளின் போது மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நேற்று (03-02-25) நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “ உலக மக்கள் தொகையில் 20 சதவிகித மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா உலக வர்த்தகத்தில் 2 சதவிகிதத்தை மட்டுமே தன் பங்காகக் கொண்டிருக்கிறது. சேவைத்துறையில் 4.6 சதவிகிதமும் , உலக சுற்றுலாத்துறையில் 1.5 சதவிகதமும் மட்டுமே நம்முடைய பங்காக இருக்கிறது. நம்முடைய இந்த பின் தங்கிய நிலைக்கு நாம் தான் காரணம். 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனாவின் டீப்சீக் AI உலக அளவில் இன்றைக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை எதிர்கொள்வதற்கான நடவடிக்கையைத் துவங்கிவிட்டார்கள். ஆனால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம். இந்தியாவினுடைய பெருமை மிகுந்த கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியின் இயக்குநர் ‘தான் தினமும் கோமூத்திரம் குடிப்பதாகவும், அதற்கு மருத்துவக் குணம் இருப்பதாகவும் சொல்கிறார் ’ போலி மருத்துவத்தை, போலி அறிவியலை பரப்புகிற வேலையைச் செய்கிறார்கள். 

ஒரே தேசம் ஒரே வரிவிதிப்புக் கொள்கையைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஒரு சதமான மக்களிடம் 40 சதமான வருமானம் சென்று சேருகிறது. அந்த ஒரு சதம் மக்களுக்கு போதுமான வரியை விதித்தால், மீதமுள்ள 99 சதமானோருக்கு வரி செலுத்த வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் நீங்கள் யார் பக்கம் இருக்கிறீர்கள் என்பதற்கு அது உதாரணம். ஒரே வரிக் கொள்கை எங்கே இருக்கிறது ? ஒரு பாப்கார்னுக்கு மூன்று விதமான வரியை விதிக்கிறீர்கள். பொட்டலம் கட்டாத பாப்கார்னுக்கு 5% வரி. அட்டைப் பெட்டியிலே இருக்கிற பாப்கார்னுக்கு 12% வரி. இனிப்பு தடவிய பாப்கார்னுக்கு 18% வரி.

நண்பர்களே,குடியரசுத் தலைவரின் உரையிலே இருக்கிற விசயம் , இந்த அரசு தமிழ்நாட்டின் தேவையை மறுக்கிற அரசாக , தமிழ்நாட்டின் உரிமையை மறுக்கிற அரசாக, தமிழ்நாட்டின் பெருமையை மறுக்கிற அரசாக இருக்கிறது. 1000 கிலோமீட்டர் பயணப்பாதையை மெட்ரோ ரயில் மூலம் உருவாக்கி இருக்கிறோம் , உலகின் மூன்றாவது பெரிய நாடு என்று இந்த அரசு பெருமையோடு சொல்கிறது. நான் கேட்கிறேன் , இந்த ஆயிரம் கிலோமீட்டரில் தமிழ்நாட்டில் இயங்குகிற மெட்ரோவின் அளவு எவ்வளவு தெரியுமா ? வெறும் 54 கிலோமீட்டர் மட்டும் தான் . உத்தரப் பிரதேசத்தில் 5 நகரங்களில் மெட் ரோ இயங்குகிறது. மகாராஷ்டிராவில் 4 நகரங்களில் மெட் ரோ இயங்குகிறது. குஜராத்தில் 2 நகரங்களில் மெட் ரோ இயங்குகிறது. மத்தியப் பிரதேசத்தில் 2 நகரங்களில் மெட் ரோ இயங்குகிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே ஒரு நகரத்தில் மட்டும் தான் 54 கிலோமீட்டர் மட்டும் தான் மெட் ரோ இயங்குகிறது. மதுரையினுடைய மெட் ரோ எங்கே? கோவையினுடைய மெட் ரோ எங்கே ?  என்று மாநில அரசு மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்புகிறது. நாங்களும் இந்த அவையிகே கேள்வி எழுப்புகிறோம். ஒன்றிய அரசு இப்பொழுது வரை பதில் சொல்ல மறுக்கிறது. ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது.

அதே நேரத்தில் பெருமையோடு நாங்கள் அனைவரும் சொல்லிக் கொள்வோம், உங்களது டங்க்ஸ்டன் சுரங்க சதித்திட்டத்தை முறியடித்த பெருமையோடு தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அவையிலே நின்று கொண்டிருக்கிறோம். தமிழக முதல்வர் தனித்தீர்மானத்தை சட்டமன்றத்திலே கொண்டு வந்து நிறைவேற்றினார். மதுரை மாவட்டத்தின் மேலூர் ஒன்றியத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் தீர்மானத்தை நிறைவேற்றினோம். ஆனாலும் ஒன்றிய அமைச்சர் டங்க்ஸ்டன் சுரங்கத்தை கைவிட மாட்டோம் என ஒரு முறை, இரு முறையல்ல மூன்று முறை அறிக்கை விட்டார்.

ஆனாலும் நாங்கள் தளரவில்லை , விடாப்பிடியான போராட்டத்தை 77 நாட்கள் நடத்தியதால் இன்றைக்கு வெற்றியோடு நாங்கள் வந்திருக்கிறோம். இந்த வெற்றிக்குப் பிறகு ஒன்றிய அமைச்சர் அவர்கள் ‘மக்கள் இனிமேல் நிம்மதியாகத் தூங்குவார்கள்’ என்று சொல்கிறார். மக்கள் இனிமேல் நிம்மதியாகத் தூங்குவார்கள் சரி , இந்தத் தூக்கத்தைக் கெடுத்தது யார் ? நீங்கள் தூக்கத்தை கெடுத்தவர்கள் . மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்து விட்டு ஒன்றிய அமைச்சர் சொல்கிறார். மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இந்தத் துயரத்தைக் கொடுத்தது யார் ? நீங்கள் கொடுத்தீர்கள் . அதனால் தான் மக்கள் விடாப்படியான போராட்டத்தை நடத்தி இன்றைக்கு டங்க்ஸ்டன் சுரங்கத்திட்டத்தை ரத்து செய்ய வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு மாண்புமிகு குடியரசுத் தலைவர் உரையிலே என்ன சொல்கிறீர்கள் ? அரியவகைக் கனிமங்கள் எல்லாம் தனியார் கைகளுக்கு தாரை வார்க்கப்படும் என்று குடியரசுத் தலைவர் உரையில் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் . ஒரு இரையைப் பறித்துவிட்டு , பெரும் விருந்தே நாங்கள் கொடுக்கிறோம் என்று தனியார் நிறுவனங்களுக்கு நீங்கள் கொடுக்கிறீர்கள். ஒரு அரிட்டாபட்டியை நாங்கள் காப்பாற்றி விட்டோம் அதற்குப் பதிலாக இந்தியாவில் பல அரிட்டாபட்டிகளை உருவாக்குவோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். 

அதேபோல இந்த அவையிலே மிகப் பெருமைக்குரிய விசயம் ,மரியாதைக்குரிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மிகக் கம்பீரமாகச் சொன்னதைப் போன்று இந்தியாவின் வரலாற்றில் வசீகரமான ஒன்று இரும்புத் தொழில்நுட்பம் . டெல்லியிலே உள்ள குதுப்மினார் இரும்புத்தூண் , துருப்பிடிக்காத இரும்புத்தூண். கோணார்க் கோயிலிலே இருக்கிற இரும்பு மாடம் , தார் இரும்பு தூண். இவையெல்லாம் உலக வரலாற்றில் இந்தியாவின் மீதான வசீகரத்திற்குக் காரணம். இந்த வசீகரத்தினுடைய பெருமைகளில் மணிமுத்தான ஒரு பெருமை இப்பொழுது உருவாகி இருக்கிறது. 

தமிழக முதல்வரால் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது “  5300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இரும்புத் தொழில்நுட்பம் இருந்தது ” என்பது உலக வரலாற்றின் ஒரு மிக முக்கியமான செய்தி. விந்திய மலைக்கு வடக்கே செம்பு மட்டும் தான் பயன்பாட்டில் இருந்தது என சொல்லப்பட்ட காலத்தில் விந்திய மலைக்கு தெற்கே குறிப்பாகத் தமிழ்நாட்டில் இரும்புப் பயன்பாடு வந்துவிட்டது . இயற்கையைப் பகுத்தறிவு கொண்டு அணுகி தங்கள் வாழ்க்கையையும் , வளத்தையும் உருவாக்கிய ஒரு அறிவுச் சமூகமாக தமிழ்நாட்டின் அறிவு மரபு இருந்திருக்கிறது என்பது மிக முக்கியமானது.

அவைத்தலைவர் அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். வருகின்ற 15 ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் ராமாயணத்தினுடைய அனிமேசன் படம் திரையிடப்படும் என்று மக்களவைச் செயலகம் சொல்லி இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பு 5300 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததைப் பற்றி தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிற ஆவணப்படத்தை இந்த அவையிலே நீங்கள் திரையிட வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் இன்று மாநில உரிமையைத் தொடர்ந்து கேள்விக்குறி ஆக்குபவர்களாக ஆளுநர்கள் இருக்கிறார்கள். குறுநில மன்னர்களாகவே தங்களை அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். நீதிமன்றங்கள் எத்தனையோ முறை தலையிலே கொட்டினாலும் அவர்கள் மாறுவதாக இல்லை. அரசர்களின் ஆடையை அணிந்து கொள்வதால் மட்டுமே ஒருவர் அரசராகி விட முடியாது. அவர் நாடகக் கலைஞராக மட்டும் தான் ஆக முடியும். இந்த உண்மையை அவருக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.

அதேபோல சட்டமன்றத்தில் இருந்து அதிகமாக வெளிநடப்பு செய்கிறவர்களாக ஆளுநர்கள் இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வெளியே போனால் தான் வெளிநடப்பு. இந்த அவையிலே தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் வெளியேறினால் தான் அது வெளிநடப்பு . இந்த அவைக்கு வருகிறவர்கள் எல்லாம் வெளியேறினால் அதற்குப் பெயர் வெளிநடப்பு அல்ல . தனக்கு இல்லாத அதிகாரத்தை இருக்கிறதாக நினைக்கிற அறியாமை எப்படிப் போக்குவது என்று தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரியவில்லை. இந்த அவையிலே இதை நான் மீண்டும் இங்கே குறிப்பிட வேண்டுமென்று நினைக்கின்றேன். 

அதேபோல குடியரசுத் தலைவர் செம்மொழியைப் பற்றிச் சொன்னார். நான் இங்கே மிகப் பணிவோடு தெரிவித்துக் கொள்ள வேண்டிய விசயம் , அரசியல் சாசன விவாதத்தினுடைய மிக முக்கியமான ஒரு விசயத்தை இங்கே மேற்கோள் காட்ட வேண்டுமென நினைக்கின்றேன். குடியரசுத் தலைவர் பதவியை என்ன சொல் கொண்டு அழைக்க வேண்டுமென்று அரசியல் சாசனத்தின் விவாதத்தின் பொழுது மிகப் பெரிய விவாதம் நடந்தது. குறிப்பாக ராஷ்டிரபதி என்று தான் அழைக்க வேண்டுமென பல உறுப்பினர்கள் சொன்ன போது , அண்ணல் அம்பேத்கர், “நான் அரசியல் சாசனத்தை ஆங்கிலத்தில் எழுதுகிறேன் . எனவே பிரசிடண்ட் ஆப் இந்தியா என்று தான் எழுதுவேன். ராஷ்டிரபதி என்று எழுத மாட்டேன் ” என்று சொன்னார்கள்.

நான் ஆங்கிலத்தில் எழுதுகிறேன் , நீங்கள் உங்கள் தாய்மொழியிலே மொழி பெயர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். ஆனால் இன்றைக்கு அரசியல் சாசனத்தினுடைய 75 ஆவது ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைத்து நடத்தப்பட்ட கூட்டுக் கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கிற நிகழ்வில், குடியரசுத் தலைவர் அரசியல் சாசனத்தினுடைய முகப்புரையைப் படிக்கிற போது ஆங்கிலத்தில் படிக்கப் போகிறார் என்று நாங்கள் எல்லாம் காத்திருந்தோம்.

ஆனால் குடியரசுத் தலைவர் இந்தியிலே இந்த நாட்டினுடைய அரசியல் சாசன முகப்புரையை வாசித்தார். இந்தி தெரியாத பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் , அப்படியே திகைத்துப் போய் நின்றோம். இது இந்தியாவினுடைய ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டிருக்கிற சவால். ஒரு மொழியின் ஆதிக்கத்தின் கீழ் இந்த அரங்கத்தை நீங்கள் கொண்டு வர நினைத்தால் இந்தியாவின் பெரும்பான்மையான இந்திய மொழிகளினுடைய பிரதிநிதிகள் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்றார்.

சார்ந்த செய்திகள்