Skip to main content

“பாஜகவினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்” - அமைச்சர் சேகர்பாபு!

Published on 05/02/2025 | Edited on 05/02/2025
BJP wants to create danger for DMK regime Minister interview 

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை ஓட்டேரியில் இன்று (05.02.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாகப் போராட்டம் நடத்தியவர்களை தயவுசெய்து இந்து அமைப்பினர் என்று ஊடகங்கள் குறிப்பிட வேண்டாம். அந்தப் போராட்டத்தை முழுக்க முழுக்க ஈடுபட்டவர்கள், எங்களுடைய கண்ணோட்டத்தைப் பொறுத்தவரையில் பாரதிய ஜனதா கட்சி என்று தான் குற்றம் சாட்ட விரும்புகிறேன். எனது எண்ணத்தைப் பொறுத்தவரையில் பாஜகவினர் திமுக ஆட்சிக்கு அபாயத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

நேற்றைய போராட்டம் என்பது தேவையற்ற போராட்டம். பல ஊடகங்களுக்கு இந்த நேரத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நான் பார்த்தவரையில் பல்வேறு ஊடகங்கள் அந்த பகுதியினுடைய மக்களுடைய பேட்டிகளை எடுத்தனர். அதில் இஸ்லாமியர் - இந்துக்களின் பேட்டிகளில் இரு மதத்தினரும் அண்ணன் தம்பிகளாகத் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்குள் எந்தவிதமான பிரிவுகளைப் பிரிவினையும் இல்லை. இந்த பகுதியைச் சாராதவர்கள் இந்த பிரச்சனையை ஏற்படுத்துகிறார்கள். ஆகவே இது தேவையற்ற பிரச்சினை என்று மக்களே எடுத்துக் கூறி இருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த பிரச்சனை தேவையற்ற பிரச்சனையாகத் தான் நாங்கள் கருத வேண்டி உள்ளது.

திருப்பரங்குன்றம் திருக்கோவிலைப் பொறுத்தவரையில் நேற்றைக்கு அங்குப் பெரிய கூட்டத்தைக் கூட்டி மதவாதம், இனவாதம் மொழிவாதம் என்ற பிரச்சனையும், பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்த நினைத்தார்கள். இதனை வட மாநிலங்கள் வேண்டும் என்றால் இதற்கான சாத்திய கூறுகள் அமையக்கூடும். தமிழக பாஜக தலைவர் மற்றும் எச்.  ராஜா போன்றவர்களுக்குச் சொல்லிக் கொள்வது என்னவென்றால். முதல்வர் மு.க. ஸ்டாலின் எங்களை அடக்க வாசிக்கச் சொல்லி இருக்கிறார். வட மாநிலங்களைப் போல இங்கும் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், உறுதி மிக்க முதல்வர். இரும்பு மனிதர். எங்குக் கலவரங்கள் ஏற்பட்டாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கத் தயாராக உள்ளார். ஆகவே பெரியார் மண்ணில், திராவிட மண்ணில் திராவிட நாட்டில் இது போன்ற சம்பவத்தை ஒரு போதும் முதல்வர் அனுமதிக்க மாட்டார்.

திருப்பரங்குன்றம் மலையைப் பொறுத்தவரை 1920ஆம் ஆண்டு மதுரை சார்பு நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதன் பிறகு 1930ஆம் ஆண்டு லண்டன் பிரிதீவ் கவுன்சில் ஒரு உத்தரவை வழங்கி உள்ளது. அதனைத் தொடர்ந்து 1958, 1975, 2004, 2017 மற்றும் 2021 என பல்வேறு கட்டங்களில் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றங்கள் வழங்கி உள்ளன. தற்போது கூட இது தொடர்பான இரண்டு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. கடந்த காலங்களில் ஏழு வழக்குகளில் எந்தெந்த அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு வழங்கியதோ அதன்படி இந்த அரசு திமுக அரசு, நீதியின் அரசு என்பதால் நீதி தேவதையை மதித்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இதை வைத்து அரசியல் குளிர்காய என்ன பிரச்சனையைக் கையில் எடுக்கலாம் என்று நினைப்பவர்களுக்குச் சொல்லிக் கொள்வது என்னவென்றால், எல்லாருக்கும் எல்லாம் என்ற இந்த அரசு, நீதிமன்றம் என்ன வழிகாட்டுகிறதோ அதன்படி தான் இந்த அரசு செயல்படும்.

BJP wants to create danger for DMK regime Minister interview 

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனுமதியோடு, துறையின் அமைச்சர் என்ற வகையில் கூடிய விரைவில் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல இருக்கிறேன். 2023, 2025ஆம் ஆண்டு என 2  வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன. அந்த வழக்கின் தீர்ப்பில் எவ்வாறு வருகிறதோ அதைப் பொறுத்து அரசு செயல்படும் என்றும் முடிவு எடுக்கிறோம். திருக்கோவில் நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் தர்கா தரப்பினருக்கு வழிப்பாட்டு முறையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கும் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி வருகிறது. இஸ்லாமியர்களும் இந்துக்களும் மாமன் மைத்துனர்களாகவும், சகோதரத்துவத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாஜக தமிழ்நாட்டை அந்நியப்படுத்தி அதன்மூலம் தேர்தல் லாபம் அடையலாம் என்று நினைக்கிறார்கள்” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்