தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முறையாக செய்யவில்லை என்று திமுக தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் அமமுகவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக அமமுகவில் இருந்து விலகிய புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர்நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் அ.ம.மு.க. அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமமுக கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பேசும் போது, தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரே சின்னத்தில் அமமுக போட்டியிடும். ஒரே சின்னத்தை ஒதுக்க கோரி நீதிமன்றத்தை நாடுவோம். எங்களுக்கு நீதி தேவதை துணை இருக்கிறார் என்று கூறினார். ஆனால், தற்போது நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு தனிச்சின்னம் வழங்க மாநில தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டதாக அமமுக பொருளாளர் வெற்றிவேல் பேட்டி அளித்துள்ளார். இதனால் அமமுக கட்சியினர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரே சின்னம் கொடுக்கப்பட்டால் அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எளிதாக இருக்கும். ஆனால் தேர்தல் ஆணையம் ஒரே சின்னம் ஒதுக்க மறுப்பதால் மக்களிடம் தேர்தல் சின்னத்தை பிரபலப்படுத்துவது மிகக் கடுமையானதாக இருக்கும் என்று அமமுக கட்சியினர் நினைப்பதாக சொல்லப்படுகிறது.