Skip to main content

“அமைச்சர் ரகுபதிக்கு அதிமுகவை குறைகூற அருகதை இல்லை” - ஜெயகுமார் காட்டம்

Published on 03/02/2025 | Edited on 03/02/2025
Jayakumar criticized Minister Raghupathi has no right to criticize AIADMK

நாடக கும்பலின் துணை நடிகர்களான ரகுபதி, பாரதி போன்றவர்கள் வாய் வீரம் காட்டுவதை நிறுத்துவது, அவர்களுடைய தலைமைக்கு நல்லது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார். 

இது தொடபாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாலியல் வன்முறை முதல், கொலை, கொள்ளை, போதைப் பொருட்கள் கடத்தல் வரை உலகில் உள்ள அனைத்து சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுபட்டு வருபவர்கள் ஆளும் திமுகவினர் என்பது, அண்மையில் வெளிவரும் செய்திகள் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. குற்றவாளிகளின் கூடாரமாகத் திகழும் திமுகவினர், தங்கள் மீதான களங்கத்தை மறைக்க அதிமுக மீது பழிபோட்டு, நடந்த பிரச்சினையை திசை திருப்புவது வாடிக்கையாகிவிட்டது.

டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சமூக விரோதச் செயல்களுக்கு திமுக கொடி லைசன்ஸ் என்பதை ஒப்புக்கொண்ட போலீஸ்; திமுக அரசின் போலீஸ், திமுக கொடி கட்டிய காரில் வந்து நள்ளிரவில் பெண்களை மிரட்டியவரிடம், வற்புறுத்தி அவருடைய உறவினர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரோடு தொடர்புடையவர்கள் என்று வாக்குமூலம் வாங்குவதும்; சட்டத்திற்குப் புறம்பாக தங்கள் குடும்பத் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு செய்வதும், அதை வைத்து எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுவதை சட்ட அமைச்சர் ரகுபதி ஒரு அடிமைத் தொழிலாகக் கொண்டுள்ளார்.

அதிமுகவால் வாழ்வும், வளமும் பெற்று, தன்னுடைய சுகபோகத்திற்காக வாழ்வளித்த கட்சியை மறந்துவிட்டு, திமுகவில் அண்டிப் பிழைக்கும் ரகுபதி போன்றவர்களுக்கு அதிமுகவை குறைகூற எந்த அருகதையும் இல்லை. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ஈடுபட்ட தி.மு.க. உடன்பிறப்பை, திமுக அனுதாபி என்று சொல்லி, முக்கிய குற்றவாளியான ‘யார் அந்த சார்.....’ என்பவரை காப்பாற்றத் துடிக்கும் கபட வேடதாரியை தலைமையாகக் கொண்ட கட்சி திமுக. 

நாடக கும்பலின் துணை நடிகர்களான ரகுபதி, பாரதி போன்றவர்கள் வாய் வீரம் காட்டுவதை நிறுத்துவது, அவர்களுடைய தலைமைக்கு நல்லது. இல்லையெனில் குட்டி குரைத்து, தாய் தலையில் விடிந்த கதையாகிவிடும். கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர் காலந்தொட்டு இன்றுவரை தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கத் தயங்காத இயக்கம் அதிமுக என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்