தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சில தினங்களுக்கு முன்பு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கு, திராவிட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு, சீமான் வீடு அமைந்துள்ள நீலாங்கரை பகுதியில் மே 17 இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தது. பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சீமானுக்கு எதிராக தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும், தந்தை பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், சீமானுக்கு பதிலளிக்க தேவையில்லை என திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வதுநினைவு நாளையொட்டி சென்னை அண்ணா நினைவிடத்தில் தீராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்பு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, பெரியார் குறித்து சீமான் பேசியது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதிலளித்த கீ.வீரமணி, “பைத்தியக்காரர்களுக்கு நாங்கள் எப்போதும் பதில் சொல்வதில்லை. வெறி நாய்களுக்கு என்ன விளைவோ, அந்த விளைவுகளை தெளிவாக செய்வார்கள். மனிதர்களுக்கும் பகுத்தறிவாளர்களுக்கும் மட்டுமே பதில் சொல்லி பழக்கப்பட்ட நாங்கள், இப்படி கீழ் இறங்க விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.