அமெரிக்கா அதிபரான டொனால்ட் டிரம்ப், கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற போது பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இரு பாலினம் மட்டுமே அங்கீகரிக்கப்படும் அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு, சட்டவிரோத குடியேற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள், பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை ரத்து என அதிரடி உத்தரவுகளை அறிவித்தார். டொனால்ட் டிரம்பின் அதிரடி உத்தரவுகள், மற்ற நாடுகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
அதன்படி, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை கையாள்வதில் கடுமையான கொள்கைகளை அறிவித்தார். சட்டவிரோதமாக குடியேறிவர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு திரும்பி அனுப்பும் நிர்வாக உத்தரவிலும் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வெளிநாட்டினர்களை அடையாளம் காணப்பட்டு கைது செய்யும் பணி அமெரிக்கா முழுவதும் தீவிரமாக நடைபெற்றன.
இந்த நிலையில், மெக்சிகோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதமாக குடியேறிவர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. அதன்படி, 205 இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு மாகாணங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவின் ராணுவ விமானத்தில் அனுப்பப்பட்டுள்ளனர். அதில் டெக்காசில் இருந்து புறப்பட்ட சி-17 விமானத்தில் 205 இந்தியர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரும் இந்தியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டு பஞ்சாப் நோக்கி அழைத்து வரப்படுவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து இந்திய அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெள்ளை மாளிகையோ, இந்திய அரசோ இது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.