திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் இன்று (31.05.2021) 75 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அமைச்சர் கே.என். நேரு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கே.என். நேரு, “திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து 150 ஆக்சிஜன் செறிவூட்டிகளைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெற்றுவந்தார்.
அதில் 75 செறிவூட்டிகள், திருச்சி அரசு மருத்துவமனைக்கும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொறுப்பாளராக இருப்பதால், அந்த மருத்துவமனைக்கு 75 செறிவூட்டிகளையும் வழங்கியுள்ளார். தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் 1,099 படுக்கைகள் உள்ளன. அதில் 175 படுக்கைகள் காலியாக உள்ளன. ஆக்சிஜன் படுக்கைகள் 743. அதில், 30 காலியாக உள்ளன. 356 ஆக்சிஜன் இல்லாத படுக்கைள், அதில் 175 காலியாக உள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 200 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அதேபோல் 200 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்புகின்றனர்.
நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைய ஆரம்பித்துள்ளது 1600 - 1700 எண்ணிக்கையில் வந்த நிலை மாறி, தற்போது நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருவதாக கூறினார். தற்போது ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. காய்கறி வாகனங்கள் தொடர்ந்து ஊரடங்கு முடியும்வரை விற்பனையை செய்யும். ஊரடங்கு முடிந்த மறுநாள் முதல் அவர்கள் காந்தி மார்க்கெட்டுக்கு விற்பனைக்குச் செல்லலாம் என்று கூறினார். சென்னையில் கோயம்பேடு சந்தை செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் இங்கு காந்தி மார்க்கெட் செயல்படுவதற்கான நடைமுறைகளை அதிகாரிகள் உறுதி செய்த பிறகு அதை செய்யலாம் என்று கூறினார்.
மார்க்கெட் திறந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கூடுவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பொது மக்களிடம் தொடர்ந்து தனிமனித இடைவெளியைக் கடைபிடியுங்கள் என்று கூறினால், பொதுமக்கள் அதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. இன்னும் சற்று கூடுதலாக அவர்கள் மீது வழக்கோ, அபராதமோ அல்லது வாகனங்களைப் பறிமுதல் செய்தாலோ அதற்கும் பொதுமக்கள் அதிகாரிகளை தொடர்ந்து வசைபாடுகிறார்கள். என்னதான் செய்வது. திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டத்திற்கு கால்வாய்கள் சீரமைக்க 66 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில் திருச்சி மாநகராட்சியில் உள்ள கால்வாய்களை சீரமைக்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் உய்யக்கொண்டான் கால்வாய் பணிகள் துவங்க உள்ளன. 'கோ பேக் ஸ்டாலின்' என்பதைவிட 'ஸ்டாண்டு வித் ஸ்டாலின்' என்ற ஆஷ்டேக்தான் நம்பர் 1இல் உள்ளது. அதிமுகவினருக்கு எப்போதும் திமுகவை திட்டுவது மட்டும்தான் தெரியும். அவர்கள் என்ன பாராட்டு மழையை பொழிந்துவிடப் போகிறார்கள்” என்று கிண்டலாக பேசினார்.