Skip to main content

சட்டவிரோதமாக மதமாற்றத்துக்கு 10 ஆண்டு சிறைதண்டனை; ராஜஸ்தானில் மசோதா தாக்கல்

Published on 04/02/2025 | Edited on 04/02/2025
10-year jail term for illegal religious conversion at Bill introduced in Rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், சட்டவிரோதமாக மதமாற்றங்களை தடுக்கும் வகையில் புதிய சட்டத்தை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங், சட்டவிரோத மதமாற்றம் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். வற்புறுத்துதல், மோசடி, திருமணம் மூலம் சட்டவிரோத மதமாற்றங்களை தடுக்கும் விதமாக அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவில், சட்டவிரோதமாக மதமாற்றம் செய்தால் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக கருதப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், குறைந்தபட்சமாக ரூ.15,000 அபராதம் வழங்கப்படும். 

பட்டியலின, பழங்குடியின நபரை, விதிகளை மீறி சட்டவிரோதமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதிக்கப்படும். அதுவே, பட்டியலின பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்களை, கூட்டமாக சட்டவிரோதமாக மதமாற்றம் செய்பவர்களுக்கு ரூ.50,000 அபராதமும், சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட சட்டத்தின் விதிகளை மீறும் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. யாராவது வேறு மதத்திற்கு மாற விரும்பினால், அவர்கள் 60 நாட்களுக்கு முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும் என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவையில் விவாதங்கள் நடைபெற்ற பின், ராஜஸ்தானின் சட்டவிரோத மதமாற்றங்களை தடுக்கும் மசோதா நிறைவேறியது. கடந்த 2008 ஆம் ஆண்டின் வசுந்தரா ராஜே அரசு ராஜஸ்தான் மத சுதந்திர மசோதாவை நிறைவேற்றியது. இருப்பினும், அது சட்டமாக்கப்படாமல், ஜனவரி 31, 2025 அன்று ஆளுநரின் ஒப்புதலின்றி அரசிடம் திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்