
அதிமுக ஆட்சிக்காலத்தில் எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பினர். ஆனால் திமுக தொழிலாளர்களின் நலன்களை பேணிக்காக்கும் இயக்கமாக திகழ்ந்து வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சேலம் மெய்யனூரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் தொமுச சார்பில் மே தின கொடியேற்று விழா, திங்கட்கிழமை (மே 1) நடந்தது. சேலம் மாவட்ட திமுக செயலாளர்கள் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தொமுச கொடியேற்றி வைத்தார். பின்னர், உழைப்பாளர் நினைவுச் சின்னத்திற்கு மலர் வளையாம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின் அவர் பேசியதாவது: “முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில்தான் மே தினத்தை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுப்பு முதன்முதலில் வழங்கப்பட்டது. 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் 36 அமைப்புசாரா நல வாரியங்கள் அமைக்கப்பட்டன. தொழிலாளர்களுக்கு வீடு வழங்கியது, தமிழகத்தில் கை ரிக்ஷாவை ஒழித்தது, சங்கம் இல்லாமல் செயல்பட்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக அரசுத் திட்டங்களை வழங்கியது, தனியார் துறை ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்கும் திட்டம், தொழிலாளர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டம், சலுகைகளை திமுக அரசு வழங்கியது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். கடந்த ஓராண்டில் 18 அமைப்புசாரா நல வாரியங்களைச் சேர்ந்த 1.35 லட்சம் தொழிலாளர்களுக்கு 247 கோடி ரூபாய் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் கொண்டு வரப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட முன்வடிவை பல்வேறு தரப்பினர் விமர்சித்தனர். அதற்கெல்லாம் மதிப்பு கொடுக்கக் கூடிய வகையிலும் தொழிற்சங்கங்கள் அந்த சட்ட முன்வடிவை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் பேரிலும் அந்த சட்ட முன்வடிவை நிறுத்தி வைப்பதாக முதல்வர் அறிவித்தார். மே தினமான இன்று அந்த சட்டமுன்வடிவை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
திமுக என்றைக்கும் தொழிலாளர் நலனைப் பேணிக்காக்கும் இயக்கமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் முந்தைய ஆட்சியாளர்கள் டெஸ்மா, எஸ்மா போன்ற சட்டங்களைக் கொண்டு வந்து தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பினார்கள். தொழிலாளர்களுக்கும் திமுகவுக்கும் இடையேயான உறவை யாராலும் அழிக்க முடியாது. பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும்போது தொமுச அணியினர் முந்திக்கொண்டு வரவேற்பு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.” இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சியின்போது தொமுச போக்குவரத்துத் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர். தொழிலாளர் அணி மாநில துணைச் செயலாளரும் ஜலகண்டாபுரம் பேரூராட்சித் தலைவருமான காசி, மத்திய மாவட்ட அவைத் தலைவர் ஜி.கே.சுபாசு, தொமுச மணி, தேர்தல் பணிக்குழுச் செயலாளர் தாமரைக்கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் மருத்துவர் தருண், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.