ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது அதிமுக பொதுக்குழு. முதலமைச்சராக வருவதற்கு சசிகலா ஆசைப்பட, ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்ல நேரிட்டது.
சிறைக்கு செல்வதற்கு முன்பு தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியையும், கட்சியின் துணை பொதுச்செயலாளராக தினகரனையும் உருவாக்கிவிட்டுச் சென்றார் சசிகலா. இவருக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ந்த தர்மயுத்தம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ஓ.பி.எஸ். அவரது இணைப்புக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வின் அழுத்தம் அதிகமிருந்தது.
ஓ.பி.எஸ். மீண்டும் அதிமுகவில் இணைந்த பிறகு நடந்த பொதுக்குழுவில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஒட்டுமொத்தமாக ஒழித்து விட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினர். அதற்கேற்ப கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த பதவிகளின் முறையே ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் உருவாக்கப்பட்டது.
இத்தகைய சட்ட திருத்தங்களை எதிர்த்து சசிகலாவும், முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அதேசமயம், அதிமுக ஆட்சியில் இருந்ததால் இந்த இரட்டைத் தலைமைக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், 4 ஆண்டுகால சிறை தண்டனையை நிறைவு செய்து விட்டு விடுதலையாகி வெளியே வந்த சசிகலா, அதிமுகவை கைப்பற்ற, கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான் என்று உரிமை கோரி வருகிறார்.
இதனால், கட்சிக்கு இரட்டைத் தலைமை வேண்டாம்; ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற குரல்கள் அதிமுகவின் இரண்டாம் நிலை தலைவர்களிடையே உயிர்ப்பித்து அது வலிமையாகத் துவங்கியது. இந்த சிந்தனை வலிமையாவதை எடப்பாடி உள்ளிட்டவர்கள் ரசிக்கவில்லை; விரும்பவில்லை. இதனையடுத்து, கட்சியின் விதிகளை மீண்டும் திருத்தி பொதுச்செயலாளராகிவிட வேண்டும் என ஓ.பி.எஸ். எடுத்த முயற்சிகள் பலனிளிக்கவில்லை.
அதேசமயம், ஓ.பி.எஸ்.சிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆதரவாளர்கள், இரட்டை தலைமையை வலிமையாக்கும் வகையிலும், அந்த இரட்டைத் தலைமைக்கு அதிகாரத்தை கூடுதலாக்கும் வகையிலும் சட்டத்தை திருத்தம் வேண்டும் என வலியுறுத்தினர். முதலில் இதற்கு ஓ.பி.எஸ். எதிர்ப்புத் தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து டிசம்பர் 1ந் தேதி நடந்த செயற்குழுவில், கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள், இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஓட்டுப் பேட்டு தேந்தெடுப்பார்கள் என்றும், இந்த விதியை மட்டும் மாற்றவோ திருத்தவோ பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும், அந்த இரட்டைத் தலைமையை ஒற்றை வாக்கில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்தனர். அந்த திருத்தத்துக்கு செயற்குழு ஒப்புதல் தந்தது.
செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவேண்டும். அதற்காக விரைவில் அதிமுக பொதுக்குழு கூடும் என எதிர்ப்பார்க்கபப்ட்ட நிலையில், அதிமுகவின் உள்கட்சி தேர்தலை திடீரென ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் அறிவித்துவிட்டனர். கிளைக்கழகம் தொடங்கி, தலைமை பதவியான ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வரை வாக்களித்து தேர்ந்தெடுப்பதற்கான தேதியையும் அவசரம் அவசரமாக அறிவித்து விட்டனர்.
கட்சி தேர்தலில் எந்த ஒரு பதவிக்கும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியிடுவதற்கான வேட்பு மணுவை இன்றும் (3.12.2021) நாளையும் கட்சி தலைமையகத்தில் பெற்றுக்கொண்டு, நாளை (4.12.2021) மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவித்தனர்.
அதனால் இன்று (3.12.2021) அதிமுக தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், யார் யாருக்கு படிவங்கள் தரலாம், யார் யாருக்கு தரப்படக் கூடாது என சில ரகசிய உத்தரவுகளை தலைமைக் கழக நிர்வாகிகளிடம் பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி.
அந்த வகையில், வேட்பு மனுக்கள் விருப்பு வெறுப்புகளுடனேயே விநியோகிக்கப்பட்டன. பலருக்கும் விண்ணப்பங்கள் கிடைக்காமல் திரும்பினர். கட்சியின் உறுப்பினர் அட்டை வைத்திருக்க வேண்டும்; தற்போது வரை அந்த அட்டை புதுப்பித்திருக்க வேண்டும். அதனை காட்டி வேட்பு மனுவை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், உறுப்பினர் அட்டை லைவில் இருந்தும் பலருக்கும் வேட்பு மனுக்கள் தராமல் மிரட்டி அனுப்பி வைத்தனர் அதிமுக நிர்வாகிகள். எதிர்த்துக் கேட்ட தொண்டர்களுக்கு அடி உதையும் விழுந்தது. உதாரணமாக, 1972 முதல் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் சென்னையைச் சேர்ந்த பிரசாத்சிங் என்பவர், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விரும்பி, விண்ணப்பப் படிவம் பெற அதிமுக கழகம் வந்திருந்தார்.
முறைப்படி வேட்பு மனுவுக்கான கட்டணத்தை கட்டி விண்ணப்ப படிவம் கோரினார். ஆனால், அவருக்கு தரமுடியாது என தலைமைக் கழக நிர்வாகிகள் மறுத்தனர். அதனை எதிர்த்து கேள்வி கேட்டார். ஒருமையில் அவரை வெளியே போகச் சொல்லி மிரட்டினார். அதற்கும் அசராத அவர், நிர்வாகிகளிடம் நியாயம் கேட்க, அவரை அடித்து உதைத்து வெளியேற்றினர். ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தூண்டுதலின் பேரிலேயே தன்னைத் தாக்கியதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் பிரசாத்சிங்.
கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கும் போட்டியிடலாம் என்கிற நிலையில், விண்ணப்பப் படிவங்களை தராமல் மிரட்டுவதும் அடித்து உதைப்பதும் அதிமுகவில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அதிமுகவின் உட்கட்சி தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரம் அவசரமாக மனுதாக்கல் செய்திருக்கிறார் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும், நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறும், தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் தேர்தலை ரத்து செய்வோம் என்றும் உத்தரவிட்டுள்ளது.