ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக வெங்கு மணிமாறனும், திமுக சார்பில் கூட்டணிக் கட்சியான மதிமுக கணேசமூர்த்தியும் போட்டியிடுகிறார்கள். மதிமுக கணேசமூர்த்தி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக எம் எல் ஏ தென்னரசு தனது வாக்கை செலுத்த ஈரோடு கருங்கல்பாளையம் வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தார். அப்போது அதிமுகவினர் யாரும் அங்கு இல்லை, மேலும் எம்எல்ஏ தென்னரசு தனது காரை விட்டு இறங்கி வாக்குச்சாவடி மையத்திற்குள் நடந்து செல்லும்போது அங்கிருந்த ஏராளமான பொதுமக்கள் எம்எல்ஏ தென்னரசு வை கண்டுகொள்ளவே இல்லை.
மேலும் அப்பகுதியில் திமுக தொண்டர்கள், திமுக கூட்டணி கட்சியினர் நிறைந்து இருந்தனர். ஒரு எம்எல்ஏ வாக்களிக்க வந்த போது அங்கிருந்த மக்கள் யாரும் எந்த விதமான மரியாதையும் எம்எல்ஏ தென்னரசுக்கு கொடுக்காததால் விரக்தி அடைந்த அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்களிக்க சென்றார். அந்த வாக்குச் சாவடி மையத்தில் இருந்த அதிகாரிகளும் எம்எல்ஏ தென்னரசு வை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
அவராகவே அங்கிருந்த அதிகாரிகளிடம் நான் இந்த தொகுதியின் எம்எல்ஏ எனக் கூறினார். அதற்கு அதிகாரிகள் "அப்படியா சார் சரிங்க ஓட்டு போடுங்க" என்று மட்டும் கூறினார்கள். அதன்பிறகு ஓட்டுப்போட சென்ற எம்எல்ஏ தென்னரசு தனது வாக்கை செலுத்திவிட்டு அங்கிருந்த நிருபர்களிடம் கையை காட்டினார். அப்போது மிகவும் பரிதாபமாக கண்களில் கண்ணீருடன் காட்சியளித்தார். அதற்கு பிறகு யாரிடமும் எதுவும் பேசாமல் வெளியே வந்த அவரிடம், அவரது ஆதரவாளர் ஒருவர் வந்து "ஏன் என்ன ஆச்சு ஏதோ ஒரு மாதிரியா இருக்கிறீர்களே" எனக் கேட்டிருக்கிறார். அதற்கு எம்எல்ஏ தென்னரசு "நம்ம கட்சி எப்படி எல்லாம் இருந்தது, இன்னைக்கு எந்த மரியாதையும் இல்லையே. ஓட்டு போட வந்தாலே நாம ஜெயிப்போமா தோற்போமானு மக்கள் மத்தியிலே இருக்கிற வரவேற்பை வைத்து புரிஞ்சுக்கலாம். இப்போ நல்லாவே தெரிஞ்சு போச்சு, என்னமோ இப்படி ஆகிப் போச்சு இதுதான் நமக்கான ஒரு பாடம்" என ஆதங்கத்துடன் கூறிவிட்டு காரில் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டார்
நடைபெறுகிற இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களிடம் ஆளும் கட்சியான அதிமுக விற்கு எவ்வளவு எதிர்ப்புகள் என்பதும் மக்கள் மனமாற்றம் மௌனப் புரட்சியாக வெடிக்கப் போகிறது என்பதும் எம்எல்ஏ தென்னரசு ஓட்டுப்போட்டு சென்ற சம்பவமே வெளிக்காட்டுகிறது.