இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார்.
அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. 2024 தேர்தலில் தமிழகத்தில் அரசியல் திருப்பம் ஏற்படும். ஒவ்வொரு பாஜக தொண்டரும் தேசமே பிரதானம் எனக் கருதி உழைக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார். மேலும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதனையடுத்து, திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா, சமீபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியா ஒருபோதும் ஒரு நாடாக இருந்ததில்லை. இந்தியா ஒரு துணைக் கண்டம். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்று பிரதமர் கூறுகிறார். தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சட்டம் இருக்காது. அரசியல் சட்டம் இல்லையென்றால், இந்தியா இருக்காது. இந்தியா இல்லையென்றால் தமிழ்நாடு தனியாகப் போய்விடும்.
நீங்கள் சொல்லுகின்ற ஜெய் ஸ்ரீராமையும், ‘பாரத் மாதா கி ஜே’யையும் நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று கூறியிருந்தார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
ஆ. ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “இந்தியாவின் அடையாளத்தை இழிவுபடுத்துவதும், இந்தியர்களின் நம்பிக்கை மற்றும் இந்து கடவுள்களை அவமதிப்பதும் இந்தியா கூட்டணியின் அரசியல் செயல்திட்டமாக மாறி வருகிறது. ஆ. ராசாவின் இத்தகைய கருத்துகளுடன் உடன்படுகிறார்களா? என்பதை காங்கிரஸும், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.