தமிழகம் முழுவதும் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை விநியோகம் செய்யும் ஆலைகளை கண்டறிந்து சீல் வைக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே திமுக பொருளாளர் துரைமுருகனின் மருமகளும், வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் மனைவியுமான சங்கீதா பெயரில் அருவி என்கிற குடிநீர் ஆலை பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
இந்த அருவி ஆலையில் மார்ச் 2- ஆம் தேதி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் ஆலையில் 3 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது, அதில் ஒரு ஆழ்துளை கிணறுக்கு அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளது எனக் காரணம் கூறி அதற்கான லைனை துண்டித்து சீல் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா துரைமுருகன் மகன் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சட்டத்தை மதிப்பவராக இருந்தால் அவர் எப்படி திமுக எம்பி ஆக இருக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் திமுகவினர் சமூக வலைத்தளங்களில் எச்.ராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.