அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் இன்று (15.12.2024) காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டமானது சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுக்கும் இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது.
அதன்படி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் பாதிப்பின் போது உரிய மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளாத அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்களின் கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான நிதி பகிர்வினை எவ்வித பாரபட்சமும் இன்றி மத்திய அரசு வழங்க வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தவறியது, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வுக்கு அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க அரசியலமைப்பு சட்டத்தைத் திருத்த வேண்டும். நீட் தேர்வு ரத்து என நாடகம் ஆடி வரும் திமுக அரசுக்கு கண்டனம். 2026இல் எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதலமைச்சர் ஆக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பைத் தமிழக அரசு நடத்த வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் 4 ஆயிரத்து 900 செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த விழாவில் வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே சுமார் 6 ஆயிரம் பேருக்கு அசைவ உணவுகளும், 750 பேருக்கு சைவ உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன. அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதி அமைந்துள்ள பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நெற்குன்றம் முதல் வானகரம் வரையிலும், காட்டுப்பாக்கம் முதல் வானகரம் வரை எனச் சாலையின் இரு புறங்களிலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் மெதுவாகச் செல்கின்றன. இதனால் வாகன் ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.