Skip to main content

'தமிழுக்கு மிகப்பெரிய ஆபத்து; சூழ்ச்சிகளை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்'-உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Published on 20/04/2025 | Edited on 20/04/2025
'Tamil is in great danger; students should understand the intrigues' - Udhayanidhi Stalin's speech

தமிழுக்கு மிகப்பெரிய ஆபத்து வந்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''தமிழர் என்பதற்கு அடிப்படையே தமிழ் தான். அந்த தமிழுக்கு இப்பொழுது மிகப்பெரிய ஆபத்தை பல்வேறு வழிகளில் ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள். மும்மொழிக் கொள்கையை கொண்டு வருகிறார்கள்; நீட் தேர்வை கொண்டு வந்தார்கள்; இந்தி திணிப்பை கொண்டு வருகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை என்று பல பெயர்களில் வெவ்வேறு பெயர்களில் வந்தாலும் ஒட்டுமொத்தமாக அவர்களின் நோக்கம் தமிழ்நாட்டில் எப்படியாவது இந்தியை திணிப்பது தான். 

இதற்கான வாதங்களின் நிறைய பேர் சொல்வார்கள். உண்மையைப் போலவே சிலர் பேசுவார்கள். மாணவர்களாகிய நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் இன்று தமிழ் உணர்வு உயிர்ப்புடன் இருப்பதற்கு காரணம் 1965ல் ஏற்பட்ட மாணவர்களுடைய எழுச்சிதான் முக்கிய காரணம். அந்த மாணவர்களுடைய போராட்டம் தான் இந்தி திணிப்பை தமிழ்நாட்டுக்குள் வர முடியாமல் தடுத்தது. உங்களுடைய சீனியர்கள் நடத்திய அந்த தமிழ் மொழி போராட்டம் தான் தமிழ் பண்பாட்டை காத்து நம்மையெல்லாம் பாதுகாத்தது.

இன்றைக்கு உங்களுக்கு முன்பு போராடிய அந்த சீனியர்களுக்கெல்லாம் கிட்டத்தட்ட 70 வயது 80 வயது இருக்கும். அவர்கள் போராடும் பொழுது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் போராடினார்கள்.  உங்களுடைய சீனியர்களுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய ஒரே ஒரு பரிசு, எங்களுடைய காலத்திலும் நாங்களும் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதில் என்றென்றும் உறுதியாக இருப்போம் என்று உங்களுடைய சீனியர்களுக்கு நீங்கள் கொடுக்கும் வாக்குறுதியை தான் அவர்கள் விரும்புவார்கள். 

பொதுவாக தந்தை பெரியாராக இருந்தாலும், அண்ணாவாக இருந்தாலும், கலைஞராக இருந்தாலும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்குவதை அவர்கள் என்றும் விரும்புவதில்லை. காரணம் படிப்பில் தான் கவனம் செலுத்த வேண்டும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தால் படிப்பு பாதி நேரம் போய்விடும் என்ற எண்ணம்தான். ஆனால் இன்றைக்கு நம்முடைய கல்விக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய அளவில் நீட் தேர்வு; மும்மொழிக் கொள்கை; புதிய கல்வி கொள்கை என பல தொந்தரவுகளை ஒன்றிய அரசு நம்முடைய மாணவர்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்ச்சிகளை ஆபத்துகளை மாணவர்களாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதனை சரியாக புரிந்து கொண்டால் என்றென்றைக்கும் நம்முடைய இன எதிரிகளால் நம்மை வெற்றி கொள்ளவே முடியாது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்