‘அதிமுகவை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் யார் வந்தாலும் சேர்த்துக்கொள்வோம்’ என்றும், ‘சசிகலா குடும்பத்தினர், தினகரன் உட்பட யார் வந்தாலும் அதிமுகவில் இடம் கிடையாது’ என்றும் அடிக்கடி மீடியாக்களில் பேசி வந்தார் அமைச்சர் ஜெயக்குமார்.
இதேபோல், ‘சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை’ என்று டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தக் கருத்தை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் வெளிப்படையாக, அழுத்தமாகப் பேசவில்லை. அமைச்சர் ஜெயக்குமாரும் பேசவில்லை. இந்த நிலையில் ஒரு சில அமைச்சர்கள், எம்பிக்கள் ஆகியோர் சசிகலா விரைவில் உடல்நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று கூறினார்கள். இதையடுத்து அவசரம் அவசரமாக 22ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 27ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறப்பது, சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, அதிமுகவினரிடம் விருப்ப மனு பெறுவது ஆகியவைப் பற்றி விவாதித்ததோடு, சசிகலா 27ஆம் தேதி விடுதலையாவது பற்றியும், அவர் வந்தால் அதிமுகவில் மாற்றம் நிகழும் என சிலர் பேசியதற்கு, ‘அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அதிமுகதான் மீண்டும் வெற்றி பெறும். ஆகையால் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எண்ணம் யாருக்கும் வேண்டாம்’ என்று கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
அதிமுக அலுவலகத்திலும், மற்ற நேரத்திலும் கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார். அதன்படி அவர் பேட்டி அளிப்பார் என்று நிருபர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் யாருக்கும் எந்த பேட்டியும் அளிக்கவில்லை. பேட்டி கேட்டதற்கு, கையெடுத்து கும்பிட்டபடி சிரித்த முகத்துடன் சென்றுவிட்டார்.
பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானவுடன், அமைச்சர் ஜெயக்குமார் உடல்நலம் பெற வேண்டும் என்று சசிகலா பற்றி தெரிவித்தார். இதேபோல் கே.பி.முனுசாமியும் தெரிவித்தார்.
உடல்நலம் பெற வேண்டும் என்று சசிகலா பற்றி தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என்று சொல்லாதது இ.பி.எஸ்.க்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால்தான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சி தலைமை ஒப்புதல் இல்லாமல் யாரும் பேட்டி தரக் கூடாது என்று கூட்டத்தில் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகியோர் கண்டிப்புடன் கூறியதால்தான் ஜெயக்குமார் பேட்டி அளிக்காமல் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.