நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகத் தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதன்படி இந்தக் குழுவினர் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் தங்களது விருப்ப மனுவையும் சமர்ப்பித்துள்ள நிலையில் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நேர்காணலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆவணங்களில் கையெழுத்திட எதிர்ப்பு தெரிவித்து இந்திய தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் போல கட்சியின் ஆவணங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கையெழுத்திட அதிகாரம் அளிக்க வேண்டும். நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை கருத்தில் கொண்டு அவைத் தலைவருக்கு அதிகாரம் வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.