“அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.-ஐயும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான இ.பி.எஸ்.-ஐயும் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர, தனித் தனியாக உயர்த்திப் பேசி அதன் மூலம் யாரும் பயனடைய முடியாது. அப்படிப்பட்ட செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஓ.பி.எஸும், இ.பி.எஸும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தேனி மாவட்டத்தில் உள்ள ஓ.பி.எஸ். ஆதரவாளர் ஒருவர், ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக ஒரு பிளக்ஸ் பேனர் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்ட மீனவர் அணிச் செயலாளரும் முன்னாள் நகராட்சி கவுன்சிலருமான வைகை கருப்பு ஜி என்பவர் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக தேனியில் உள்ள மதுரை ரோட்டில் மெகா சைஸ் பிளக்ஸ் பேனர் வைத்துள்ளார். அதில், முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது படங்களுடன் ஓ.பி.எஸ். நடந்து வருவதுபோல் படமும், அவரது மகன் எம்.பி. ரவிந்திரநாத் குமார் ஆகியோரது படங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தது.
இதில் முன்னாள் முதல்வர் இ.பி.எஸ். படம் இடம்பெறவில்லை. அதோடு அந்த பேனரில், ‘அம்மாவின் நல்லாசியுடன்.. அதிமுக என்னும் எஃகு கோட்டையின் பாதுகாவலரே.. ஓ.பி.எஸ். அவர்களே. உங்கள் தலைமையில் கழகத்தை வழிநடத்துவோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிளக்ஸ் பேனர் சமூக வலைதளங்களில் பரவி, பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. அதுபோல் நெல்லை மாவட்டத்தில் உள்ள மானூர் உள்ளிட்ட சில பகுதிகளில் ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு பிளக்ஸ் பேனர்களை ஆதரவாளர்கள் வைத்துள்ளனர். அதில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதைக் கண்டு டென்ஷனான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் சிலர், நெல்லை டவுன் உள்பட சில பகுதிகளில் இ.பி.எஸ்.க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். இப்படி ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே பேனர், போஸ்டர் யுத்தம் தொடர்ந்துவருகிறதே தவிர, தலைமையின் அறிக்கையை எல்லாம் ர.ர.க்கள் காற்றில் பறக்கவிட்டு கொண்டுதான் வருகிறார்கள்.