![Velmurugan has been a strong critic of the BJP](http://image.nakkheeran.in/cdn/farfuture/AWUJRdlnsgwk1MTmZUjxIpFAAQFaIRsU3k9CfbdhvRY/1688983712/sites/default/files/inline-images/1000_114.jpg)
வேலூரில் நடைபெற்ற திராவிட நட்புக் கழகத்தின் மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்திக்கையில், “இந்தியாவை அமைதியின்மையை நோக்கி நகர்த்துகிறது பாஜக. தான்தோன்றித்தனமாகத் தன்னிச்சையாகச் செயல்படுகிறார் ஆளுநர். அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடுகிறார். துணிந்து முதலமைச்சர் எடுத்த இந்த முடிவை மனதார வரவேற்றுப் பாராட்டுகிறோம்.
தமிழ்நாட்டு அரசு உயர் பதவிகளில் இன்னமும் ஒன்றிய அரசின் ஆதரவாளர்கள் கோலோச்சி வருகிறார்கள். அவர்களையும் இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். ஆளுநர் தமிழக மக்களுக்கு எந்த மதிப்பும் அளிக்காமல் செயல்படுகிறார். அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். 2018 ஆம் ஆண்டிலிருந்து எனது மனைவி காயத்ரி கருத்து முரண்பாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. எனது அரசியலை பிடிக்காத சங்பரிவார கூட்டம். எனது மனைவிக்கு காஞ்சிபுரம் பாஜக மாவட்டச் செயலாளர் பதவி கொடுத்து என்னை பழிவாங்க நினைக்கிறார்கள்.
சங்கிகளின் கும்பலுக்கு நான் எச்சரிக்கை செய்கிறேன். உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால் தைரியம் இருந்தால், எனது பொது வாழ்வில் லஞ்சம் வாங்கியதையோ அரசு சொத்தை கைப்பற்றியது குறித்தோ ஒரு சின்ன குற்றச்சாட்டை வைத்தோ என்னுடைய வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்ப முடியாது. நான் செய்யும் செயல்கள் சனாதன சங்கிகளின் கும்பலுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. எனது மனைவிக்குப் பதவியைக் கொடுத்து எனது பொதுவாழ்வை முடக்க நினைக்கிறார்கள். இதை எதிர்கொள்ளத் துணிவு இல்லாதவர்கள் அவதூறு பரப்பி பெண்களைப் பயன்படுத்திப் பழிவாங்க நினைத்தால் விபரீதம் ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.