தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27ம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் டிசம்பர் 30ம் தேதியும் நடக்கிறது. இதனால் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்ற தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ரிப்போர்ட் ஒன்றை உளவுத்துறை முதல்வர் எடப்பாடியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக கட்சிக்கு ஆதரவாக பாஜக கட்சியினரை பிரச்சாரத்தில் ஈடுபடுத்த வேண்டாம் என்று அதிமுக தலைமை மறைமுகமாக கட்சியினருக்கு உத்தரவு போட்டதாக சொல்லப்படுகிறது. தேர்தல் நேரங்களில் மத்திய அரசு கொண்டு வரும் மசோதாக்கள் அதிமுக கட்சியை பெரிதும் பாதிக்கப்படுவதாக அக்கட்சியினர் புலம்பி வருகின்றனர்.
இதேபோல் வேலூர் நாடாளுமன்ற தேர்தலின் போது முத்தலாக் மசோதாவை மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்தது. இதனால் வேலூர் தொகுதியில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு ஏற்படும் சூழல் இருந்தும் தோல்வியை தழுவியது. அது மட்டுமில்லாமல் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவினர் பிரச்சாரம் செய்வதை அதிமுக முற்றிலும் தவிர்த்தனர். இந்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் நடைபெற இருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு தமிழகத்தில் எதிர்ப்பு அதிக அளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் கடுமையாக பாதிப்பு ஏற்படும் என்று உளவுத்துறை ரிப்போர்ட் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக கட்சியின் ஒரு சில நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி வைத்தது தவறு என்று புலம்பும் அளவிற்கு சென்றுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக செல்வாக்கு குறைவாக உள்ள இடங்களில் அதிக அளவு பணத்தை செலவு செய்து வெற்றி பெறலாம் என்று அதிமுக தரப்பு முயற்சி செய்து வருவதாக கூறுகின்றனர்.