நகர்ப்புறம் மற்றும் பேரூராட்சிகளின் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் நடக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அந்தந்த பகுதியில் தேர்தலுக்கு போட்டி போட விருப்பமனு கொடுத்த கட்சிக்கார்களிடம் நேர்காணலை நடத்தி வருகிறார்கள்.
அது போல் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தின் சார்பில் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் நத்தம், வேடசந்தூர், வடமதுரை, கீரனூர், பாளையம், எரியோடு உள்பட ஆறு பேரூராட்சிகளுக்கு போட்டியிட வேட்புமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் ஒட்டன்சத்திரம் அண்ணாநகரில் உள்ள உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த நேர்காணலுக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு விருப்ப மனு தாக்கல் செய்த கட்சிப் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இதில் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் உள்ள பதினெட்டு வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த கட்சிக்காரர்களையும் பேரூராட்சிகளில் போட்டிபோட விருப்ப மனு கொடுத்த கட்சிக்காரர்களிடமும் அமைச்சர் சக்கரபாணி தனித்தனியாக நேர்க்காணல் நடத்தினார். இதில், ‘கட்சியில் எத்தனை வருடம் இருக்கிறீர்கள்? கட்சிக்காக தங்கள் பங்களிப்பு என்ன? தேர்தலில் போட்டி போடுவதின் மூலம் மக்கள் மத்தியில் என்ன செல்வாக்கு உங்களுக்கு இருக்கிறது? அதோடு இந்த தேர்தலில் எவ்வளவு பணம் செலவு செய்ய போகிறீர்கள் உள்பட சில கேள்விகள் கேட்கப்பட்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
நேர்காணலில் கலந்து கொண்ட கட்சிக்காரர்களில் யார்? யார்? வேட்பாளர்கள் என விரைவில் தலைமை அறிவிக்கவும் தயாராகி வருகிறது. இதில் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன், ஒட்டன்சத்திரம் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.