
செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் கூடியதிலிருந்து அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தான உச்சக்கட்ட மோதல் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அந்தக் கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்பதை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் கூட்டம் முடிந்து வெளியே வந்த துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி, அக்டோபர் 7-ஆம் தேதி அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும் என்றார்.
இந்த நிலையில் அ.தி.மு.க செயற்குழு கூட்டத்துக்குப் பின்னர் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் அவர் அவர் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். அந்த வகையில் இன்று நடந்த கூட்டத்திலும் சரியான முடிவு எடுக்கப்படவில்லையாம்.
அ.தி.மு.க ஒற்றைத் தலைமையே முன்வைத்து பேசும் நிலையில் ஓ.பி.எஸ், முதல்வர் வேட்பாளரை நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை எனக்கு கொடுக்கவேண்டும் என முன்வைத்துள்ளார்.
ஆனால், எடப்பாடியோ தலைமையை ஓ.பி.எஸ்-க்கு கொடுத்துவிட்டால் பிறகு தனக்கு எம்.எல்.ஏ சீட்டே கொடுக்காமலும் போகலாம் என்ற கண்ணோட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் நிலையில், மேலும் நாளை அறிவிக்கப்போவதாக இருந்த முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு, சாத்தியமில்லை என்கிற சந்தேகத்தையே அ.தி.மு.க மூத்த முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.