அதிமுக - பாஜக கூட்டணி உடையுமா எனும் கேள்வி சமீபகாலமாக எழுந்து வருகிறது. காரணம், அதிமுக மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தங்கள் தோழமைக் கட்சிகள் குறித்து மாறி மாறி தங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்தத் தலைவர் பொன்னையன் ஆரம்பித்த இந்த சர்ச்சைகள், அதிமுக தரப்பில் செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் என நீண்டது. இதேபோல், பாஜக தரப்பில், அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, 66ஐ விட 4 எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சியாக செயல்பட்டுவருகின்றனர் என பேசியிருந்தார். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து சுமூக உறவை தொடர்வதற்கு அதிமுக தரப்பில் அதன் ஒருங்கிணைப்பாளர்களான ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ். கூட்டாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பொன்னையன் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்தார். அதேசமயம் இ.பி.எஸ், வி.பி. துரைசாமி மீது சிறு கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இது சுமூக உறவை நீட்டிக்குமா அல்லது துண்டிக்குமா எனும் கேள்வியை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுப்பியிருந்தது.
இந்நிலையில் இதற்கு முழுதாய் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது கருத்தைத் தெரிவித்திருந்தார். ஆனால், அது தற்போது பாஜக இன்னும் தமிழ்நாட்டில் உறுதியாக வேண்டுமா எனும் கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், “குடியுரிமை திருத்தம் சட்டம், வேளாண்மை சட்டம் போன்ற முக்கிய சட்டங்களுக்கு ஆதரவு அளித்து எங்களுடன் நின்ற பெரிய கட்சி அ.தி.மு.க., தற்போது பா.ஜ.க. குறித்து பொன்னையன், செல்லூர் ராஜூ ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துகள் என்னை பொறுத்தவரையில் அவர்களுடைய தனிப்பட்ட கருத்தாகத்தான் பார்க்கிறேன். அதற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அ.தி.மு.க.வை அழித்துத்தான் வளர வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் பா.ஜ.க.வுக்கு கிடையாது. தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு பெரிய இடம் இருக்கிறது. அதே நேரத்தில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் ஒரே கூட்டணியில் இருப்போம். எந்த குழப்பமும் இல்லை. அதே நேரத்தில் அ.தி.மு.க.வில் யாரேனும் கருத்து சொன்னால் அவர்களை ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் கேட்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
ஆனால் அண்ணாமலை கடந்த மார்ச் 17ம் தேதி மதுரையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டவர்களைச் சந்தித்து உரையாற்றினார். அப்போது அவர் அந்தக் கூட்டத்தில், “தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டு 15 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகத்தில் தனித்துப்போட்டியிட்டு 25 இடங்களில் வெற்றி பெறும் அளவுக்கு பாஜக வளர்ந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
மார்ச் டூ ஜூன் மாதத்திற்குள் அண்ணாமலை, பாஜகவின் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து இருவேறு கருத்துகளைத் தெரிவித்திருப்பது பாஜக இன்னும் தமிழ்நாட்டில் பலமாக வேண்டும் என அவர் நினைக்கிறாரோ எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.