அமமுக எல்லாம் ஒரு கட்சியே இல்லை. பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்ததுபோல் அமமுகவின் நிலைமை உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேலியாக குறிப்பிட்டார்.
சேலத்தில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம், புதன்கிழமை (மார்ச் 20, 2019) நடந்தது. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோம். இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துவோம். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம்கட்டப் பணிகளை தொடங்க அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.
ஏற்கனவே சட்டசபையில் தெரிவித்தபடி, கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவோம். திமுக தேர்தல் அறிக்கை, பொய்யானது. அவர்கள் சொல்வார்கள்; ஆனால் செய்யமாட்டார்கள். ஆனால் நாங்கள் அப்படியல்ல. சொல்லமாட்டோம். ஆனால் செய்துவிடுவோம். தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடியை தமிழகத்திற்கு அழைத்துள்ளோம். நான்கு மாவட்டத் தலைநகரங்களில் பிரச்சார கூட்டங்களில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமமுக எல்லாம் ஒரு கட்சியே இல்லை. இன்னும் பிறக்காத குழந்தைக்கு பெயர் வைத்தது போல் இருக்கிறது அமமுகவின் நிலைமை. அக்கட்சி இன்னும் பதிவு செய்யப்படவில்லை. இன்னும் அவர்களுக்கு சின்னம்கூட கிடைக்கவில்லை. ஊடகங்களில் வெளியாவதெல்லாம் கருத்துக்கணிப்புகள் இல்லை. அது, கருத்து திணிப்பாகத்தான் இருக்கிறது.
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 3 இடங்களில்தான் அதிமுக வெல்லும் என்றார்கள். ஆனால், பத்து தொகுதிகளில் வெற்றி பெற்றோம். சென்ற மக்களவை தேர்தலில் 39 இடங்களில் போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றோம். இப்போது எங்கள் கூட்டணியில் உள்ள பாமக ஒரு தொகுதியிலும், பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. அவையும் சேர்த்து, இந்த தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.