தாமிரபரணிக்கரையின் ஸ்ரீவைகுண்டம் நகரிலிருந்து தூத்துக்குடி எம்.பி. வேட்பாளரான தி.மு.க.வின் கனிமொழிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார் வைகோ. தூத்துக்குடி குறுக்குச்சாலை, நாகலாபுரம் வரை சென்றது அவரது பிரச்சாரம். அவரது பரப்புரையின் போது கனிமொழியும் இருந்தார்.
பரப்புரையின் போது பேசிய வைகோ, தி.மு.க.வின் கனிமொழிக்காக வாக்கு சேகரிப்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். அவர் பெண் உரிமைக்காக, விவசாயிகள், நலிந்தோர். மீனவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் நலனுக்காகக் குரல் கொடுப்பவர். அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கவேண்டும். மோடி அரசானது தமிழகத்தை, அனைத்து துறைகளையும் வஞ்சித்து விட்டது.
இலங்கை அரசால் மீனவர்கள் வஞ்சிக்கப்பட்ட போதும், கஜா புயலால் தமிழக மக்கள் உயிரிழந்த போதும், ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் அப்பாவி மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், மோடி ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. ஜி.எஸ்.டி.யால் பெட்டிக்கடை மளிகைக் கடைகள் வியாபாரிகள் நசுக்கப்பட்டுள்ளனர் என்று பேசினார். பரப்புரையின் போது அனைத்துக் கட்சித் தொண்டர்கள் உட்பட திரளான கூட்டம் காணப்பட்டது.