என்.எல்.சியை கண்டித்து டிசம்பர் 26-ல் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பேரணி, போராட்டம் - த.வா.க தலைவர் வேல்முருகன் அறிவிப்பு
என்.எல்.சிக்கு நிலம், வீடு கொடுத்த விவசாயிகளின் போராட்ட கூட்டமைப்பு மற்றும் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் கடலூரில் நடைபெற்றது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநகர துணைமேயர் பா.தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் மணிவாசகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்கு பிறகு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்.எல்.சி நிறுவனம் மின்சார உற்பத்திக்காக 53 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி மின்சார உற்பத்தி செய்து பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றது. ஆனால் நிலம் கொடுத்த மக்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு இல்லை, உரிய இழிப்பீட்டு தொகை வழங்கவில்லை. இந்த நிலையில் என்.எல்.சி நிர்வாகம் தற்போது புதிதாக நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையுடன் இணைந்து விவசாயிகளின் வீடுகளை இடித்து, நிலங்களைக் கையகப்படுத்த முயற்சி செய்து வருகின்றது. மேலும் புதிதாக நிலங்களைக் கையகப்படுத்தவும், வீடுகளை இடிக்கவும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
என்.எல்.சிக்கு வீடு, நிலம் கொடுத்த விவசாயிகளும், பொதுமக்களும் மற்றும் புதிதாக வீடு நிலம் கையகப்படுத்த உள்ள நபர்களும், பல்வேறு கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் நில ஆர்ஜித சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டியும் தற்போது புதிதாக எடுக்கப்படவிருக்கும் நில உரிமையாளர்களுக்கு அவார்டு வழங்கும் நாளிலேயே நிரந்தர வேலைக்கான பணி ஆணை வழங்க வேண்டும் என்றும் வேலை பெற விரும்பாதவர்களுக்கு ஒருமுறை பணப்பயனாக 50 லட்சம் வழங்க வேண்டும், என்.எல்.சி நிர்வாகம் நிலங்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், வீட்டுமனைக்கு வகைப்பாடு வித்தியாசம் என்று ஒரு சென்ட்க்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் போது தமிழக அரசு வேலை வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்துள்ளதைப் போல் என்.எல்.சி நிர்வாகம் கையகப்படுத்தும் நிலத்திற்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும், நிலம் கொடுத்த மற்றும் புதிதாக நிலம் கொடுக்க உள்ளவர்களுக்கு பாரபட்சம் இன்றி நிரந்தர வேலை மற்றும் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மேலும் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் நேரடியாக தலையீட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது மட்டுமின்றி ஏற்கனவே இரண்டு முறை அமைச்சர்கள் தலைமையில் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. அதேபோல் முத்தரப்பு கூட்டம் நடத்தி பாதிக்கப்பட்ட மற்றும் புதிதாக நிலம் வழங்க உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிரந்தர வேலை, உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, என்.எல்.சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு அழுத்தம் தரும் வகையில் வருகிற டிசம்பர் 26_ஆம் தேதி மாபெரும் பேரணி மற்றும் போராட்டம் என்.எல்.சியில் நடைபெற உள்ளது. இந்தப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா மற்றும் த.வா.க நிறுவனர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும் விவசாயிகள், நிலம் கொடுத்தவர்கள், வேலை கிடைக்காதவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்தப் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொண்டு ஆதரவு வழங்க வேண்டும். இது மட்டுமின்றி பல்வேறு கட்சி தலைவர்கள் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். அவர்கள் மூலம் சட்டமன்றத்தில் என்.எல்.சி தொடர்பான பிரச்சனைக்கு சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நடவடிக்கை மேற்கொள்ள உள்ளோம். ஆகையால் தமிழக முதலமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி என்.எல்.சியால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் த.ஆனந்த் மற்றும் வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள், என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் போராட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.