“திராவிடம் என்பதை தமிழகம் என சுருக்கி விட்டார்கள்” என்கிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில தினங்கள் முன் நடந்த திருக்குறள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “திருக்குறளை வாழ்க்கை நெறிமுறை நூலாக மட்டும் காட்ட நினைப்பது தவறு. நம் நாட்டின் ஆன்மீக சிந்தனைகளைக் கொண்ட நூல் திருக்குறள். ஆனால் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் உண்மையான அர்த்தத்தை விளக்கவில்லை. திருக்குறளின் உண்மையை கூறும் வகையில் அதை மொழிபெயர்க்க வேண்டும்” எனக் கூறி இருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநரின் இந்த பேச்சு சர்ச்சை ஆனது. பல அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்னும் திட்டத்தின் கீழ் இரண்டு நாள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என். ரவி துவக்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “இந்தியா எனும் தேசத்தை புரிந்து கொள்வது என்றால் நாம் பாரதத்தை புரிந்து கொள்ள வேண்டும். தர்மத்திற்கு கட்டுப்பட்டு இந்திய மன்னர்கள் ஆட்சி நடத்தினர். பக்தி மார்க்கத்தின் வழி நின்று அதனை பரப்பினர். ஆனால் கடந்த காலங்களில் காலனிய சக்திகள் நமது கலாச்சாரத்தினை அழிக்கப் பார்த்தனர்.
அதிகாரத்திற்காக மொழியின் அடிப்படையிலும் சாதியின் அடிப்படையிலும் கட்சியினர் அரசியல் செய்கின்றனர். அரசியல் கட்சியினர் நாட்டு மக்களின் பார்வையை குறுக்கி விட்டனர். தற்போது திராவிடம் என்றால் தமிழகம் மட்டும் என்று பேசப்பட்டு வருகிறது. ஆனால் தேசிய கீதத்தில் வரும் திராவிடம் என்பது தமிழ்நாடு மட்டும் அல்ல. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களை உள்ளடக்கியது” என கூறியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, “ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மாணவர்களிடம் விஷக்கருத்தை போதிக்கிறார். இது மிகவும் தவறானது. தமிழ் கலாச்சாரம் இதனை ஏற்றுக்கொள்ளாது” என கூறியுள்ளார்.