நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.
ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.