அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவாதம் எழுந்து பல்வேறு வழக்குகளுக்கு பிறகு எடப்பாடி தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக நிலைநிறுத்தியுள்ளார். தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்.வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சார்பில் தனித்தனியாக நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இந்த வழக்கு வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டவிதிகள் திருத்தும் தொடர்பாக 10 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் நேற்று கூறியிருந்தது. இந்நிலையில் இந்த மனுவை ஓபிஎஸ் சார்பில் அவர் அணியைச் சேர்ந்த புகழேந்தி டெல்லி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார். அந்த மனுவில் அதிமுக சட்டவிதிகள் திருத்தம் தொடர்பாக சிவில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக முடிவு எடுக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.