நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி அமோக வெற்றி (தேனி தவிர) பெற்றிருந்த சூழலில், தள்ளிவைக்கப்பட்டு ஒரு இடைத்தேர்தல் போல நடந்த வேலூர் தேர்தலில், ஏ.சி.சண்முகத்தை தவிர வேறு யாராக இருந்தாலும் போட்டியிலிருந்து விலகியிருப்பார். ஆனால், ஏ.சி.சண்முகமோ, 'திமுகவை என்னால் வீழ்த்தமுடியும்; என்னால் மட்டுமே வீழ்த்த முடியும் ' என சொல்லி போட்டியிலிருந்து விலகாமல் திமுகவை எதிர்த்து களமிறங்கினார்.
அதுவும் திமுகவின் அரசியல் ஜாம்பவான்களில் ஒருவரான துரைமுருகனின் மகனை எதிர்த்து களமிறங்க ஒரு துணிச்சல் வேண்டும். திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ.சி.எஸ்., மயிரிழையில் தோல்வியை சந்தித்திருக்கிறார். இந்த தோல்வி அவரை மனதளவில் பலகீனப்படுத்தியுள்ளது என்கிறார்கள் அவருக்காக தேர்தல் களப்பணியில் இருந்த அதிமுகவினர்.
இது குறித்து நம்மிடம் பேசிய அவர்கள், "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களிலே டெல்லிக்கு சில தகவல்களை அனுப்பியிருந்தார் ஏ.சி.எஸ்.! குறிப்பாக, 'எடப்பாடியும் துரைமுருகனும் கைக்கோர்த்திருக்கிறார்கள். வேலுரில் திமுக ஜெயிக்க அதிமுக உதவவேண்டும். அதற்கு பிரதிபலனாக நாங்குநேரி-விக்கிரவண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு திமுக உதவ வேண்டும்' என பரஸ்பரம் எழுதப்படாத ஒரு ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதனால், நீங்கள் தான்(டெல்லி) அதிமுக தலைமையிடம் பேச வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து, ஓபிஎஸ்சை டெல்லிக்கு வரவழைத்து கண்டித்ததுடன் ஏ.சி.எஸ்.சின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். திமுகவுடன் ரகசிய உறவை வைத்துள்ள எடப்பாடியின் நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம்' என எச்சரித்திருந்தார் அமித்ஷா. இதனை தொடர்ந்தே ஏ.சி.எஸ்.சின் வெற்றியில் வேகம் காட்டினார் எடப்பாடி. அதெல்லாம் 'சும்மா' என தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டது என நினைக்கிறார் ஏ.சி.எஸ்.! இந்த நிலையில் அப்-செட்டாகியிருக்கும் ஏ.சி.சண்முகம், அதிமுகவுக்கு எதிரான தனது ஆதங்கத்தை டெல்லிக்கு தெரியப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார்" என சுட்டிக்காட்டுகிறார்கள்.