Skip to main content

காரியம் ஆகணும் என்றால் காலைப்பிடிப்பது என்பது இதுதானோ? 

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

ddd

 

தேர்தலில் வணக்கம் செலுத்தி வாக்கு சேகரிப்பது தவறு அல்ல. ஆனால் வயது வித்தியாசம் இல்லாமல் காலில் விழுவதால்தான் சுயநலம், பதவி வெறி என்ற விமர்சனம் எழுகிறது. தன்னைவிட 10 வயதுக்கும் மேலாக வயது குறைந்த தேனி எம்.பி. ரவீந்திரநாத்குமார் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறார் 53 வயதான சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம்.  

 

மதுரை மாவட்டம் சோழவந்தான் அதிமுக வேட்பாளராக மாணிக்கம் அறிவிக்கப்பட்டார். இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். தனக்கு வாய்ப்பு கிடைத்ததும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், அவரது மகன்களுக்கும் நன்றிகளை தெரிவித்திருக்கிறார். மேலும் தனது வேட்புமனு தாக்கலின்போது தாங்களும் உடனிருக்க வேண்டும் என்று ரவீந்திரநாத்குமாரிடம் அன்போடு வலியுறுத்தியிருக்கிறார் மாணிக்கம். ‘எப்போது என்று நேரம் சொல்லுங்கள், வருகிறேன்’ என அவரும் கூறியிருக்கிறார். அதன்படி அவருடன் சென்றுள்ளார்.

 

ddd

 

16ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு ஆசிர்வாதம் பண்ணுங்கண்னே என்று ரவீந்திரநாத்குமார் காலில் விழுந்தார் மாணிக்கம். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் அனைவரும், பத்து வயதுக்கும் மேலாக வயது குறைந்தவர் காலில் விழுகிறாரே என்று அதிர்ச்சியானார்கள். அவரின் தோளை தொட்டு எழுந்திருங்கன்னு சொல்லி, வேட்புமனுவை தாக்கல் பண்ணுங்க என்று சொன்னார் ரவீந்திரநாத். 

 

வயது குறைந்தவர் காலில் விழுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர்கள், ''வயது வித்தியாசம் பார்க்காமல் காலில் விழுவது பதவி வெறிதான். காரியம் ஆகணும் என்றால் காலைப் பிடிப்பது இதுதான்'' என்றும் கமெண்ட் அடித்துச் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்