தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்துப் பேசியதும் மற்றும் பல நிகழ்ச்சிகளில் சனாதனத்திற்கு ஆதரவாகப் பேசியதும் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஒரு மாநில ஆளுநர் என்பவர் மாநில அரசின் நடவடிக்கைகள் மற்றும் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் செயல்படுபவர். தமிழகத்தின் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படுகின்ற தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு அதைப் பரிந்துரைக்க வேண்டும். அதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் மாநில அரசை அழைத்துப் பேசி சரி செய்துகொள்ள வேண்டும். ஆனால் எந்தக் காரணமும் சொல்லாமல் தன்னுடைய அலுவலகத்திலேயே வைத்திருப்பது என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குக் கொடுக்கப்படுகின்ற மரியாதை அல்ல. ஏறத்தாழ 20 சட்டங்கள் தமிழகச் சட்டமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டங்கள் ஆளுநர் அலுவலகத்தில் தூங்குகிறது. ஆளுநர் என்ன வேலை செய்கிறார் என்பதே எங்களுக்குத் தெரியவில்லை. இந்த ஆளுநர் அரசியல் காரணங்களுக்காக சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.
அரசியலுக்கும் ஆளுநருக்கும் தொடர்பே இல்லை. இந்த நாட்டில் ஒரு முதலமைச்சர் என்பவர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். முதலில் அவர் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒரு குடியரசுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும், சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்படித் தேர்ந்தெடுக்கப்படாமல் நியமிக்கப்படுகிற ஒரே பதவி ஆளுநர் பதவி. அப்படி நியமிக்கப்படுகின்ற ஆளுநர் தனக்குப் பெரிய அதிகாரம் இருப்பதாக நினைத்துக் கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிப்பது போல நடப்பதும், நிறைவேற்றப்படும் சட்டங்களைப் பரிந்துரைக்காமல் இருப்பதும் தவறு.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், ஆளுநர் சொல்கிறார் ஜி.யு.போப் திருக்குறளை மொழிபெயர்த்ததில் தவறு இருக்கிறது என்று, எனக்குப் புரியவில்லை ஆளுநர் என்பவர் தமிழ் மொழியில் மிகப்பெரிய அறிஞராக இருந்தால்தான், மூல மொழியைச் சரியாகத் தெரிந்திருந்தால்தான் மொழிபெயர்ப்பு சரியா தவறா என்பதைச் சொல்ல முடியும். இவருக்குத் தமிழ் எந்த அளவிற்குத் தெரியும், மொழிபெயர்ப்பை எப்படி குறை சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஆளுநர் என்பதனாலே இப்படிச் சொல்கிறார். பாஜகவால் நியமனம் செய்யப்பட்ட ஆளுநர்கள் இப்படித்தான் பேச வேண்டும் என்ற மரபு உருவாகிவிட்டதோ என்று நினைக்கிறேன். அதேபோல் இந்த நாட்டை, பாரதத்தை உருவாக்கியவர்கள் ரிஷிகளும், சனாதனமும்தான் என்கிறார் ஆளுநர். இந்த பாரத தேசம் 1947 ல் தான் உருவானது'' என்றார்.