இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதனைத் தொடர்ந்து மறுத்து வரும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில், தாத்தாவிற்கு ஆக்சிஜன் கேட்டவர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அமேதியைச் சேர்ந்த ஷஷாங் யாதவ், நடிகர் சோனு சூட்டிடம் தனது தாத்தாவிற்கு ஆக்சிஜன் கேட்டு ட்வீட் செய்திருந்தார். மேலும், ஆக்சிஜன் தேவையென தி ஒயர் ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளருக்கும் ட்விட்டரில் மெசேஜ் செய்திருந்தார். அப்பத்திரிகையாளரும் ஆக்சிஜன் தேவை என தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். மேலும், இதுதொடர்பான அடுத்தடுத்த ட்வீட்டில் அமேதி நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான ஸ்மிரிதி இராணியை அந்தப் பத்திரிகையாளர் டேக் செய்திருந்தார்.
சிறிது நேரத்திலேயே பத்திரிகையாளரின் ட்வீட்டிற்குப் பதிலளித்த ஸ்மிரிதி இராணி, ஷஷாங்கை பலமுறை அழைத்ததாகவும்,அவரை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்தார். மேலும், அந்த நபரை கண்டுபிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், அமேதி போலீஸாரையும் அறிவுறுத்தியுள்ளதாக கூறியினார். ஆனால் அதற்குள் ஷஷாங் யாதவின் தாத்தா மரணமடைந்துவிட்டார். இதனை தி ஒயர் ஊடக பத்திரிகையாளர், ஸ்மிரிதி இராணியிடம் தெரிவித்தார். அதற்கு அவர், ஷஷாங் யாதவை தான் மட்டுமின்றி, உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகமும், அமேதி போலீஸாரும் அவரது தொலைபேசிக்கு அழைப்பு விடுத்ததாகவும், அவர் பதிலளிக்கவில்லை எனவும் கூறியதோடு, ஷஷாங்கின் தாத்தா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
இதன்பிறகு அமேதி மாவட்ட ஆட்சியர், தி ஒயர் பத்திரிகையாளர் ஷஷாங்கின் தாத்தாவிற்கு உதவி கேட்டு பகிர்ந்த ட்வீட்டில் ஒரு அறிக்கையைப் பதிவிட்டார். அதில், ஷஷாங் தாத்தா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், அவருக்கு கரோனா இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக, அமேதி போலீஸார் ஷஷாங் உதவி கேட்டு பதிவிட்ட ட்வீட்டில், ஷஷாங்கின் தாத்தா கரோனாவால் பாதிக்கப்படவில்லையென்றும், அவருக்கு ஆக்சிஜன் தேவை என பரிந்துரை செய்யப்படவில்லை என்றும் கூறி, இது கிரிமினல் குற்றம் என கமெண்ட் செய்ததோடு, பொது மக்களிடையே பயத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் ஷஷாங்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி மற்ற நோய்களுக்கான சிகிச்சைக்கும் ஆக்சிஜன் பயன்படுத்துவது வழக்கமானது என்ற நிலையில், ஆக்சிஜன் கேட்ட நபர் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.