ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகியுள்ள ப.சிதம்பரத்திற்கு உண்மை அறியும் சோதனை நடத்த சிபிஐ அனுமதிகேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிதம்பரம் ஆகஸ்ட் 21 அன்று சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். தற்போது ஆகஸ்ட் 30 வரை சிபிஐ காவலில் வைக்க அனுமதி பெறப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உண்மை கண்டறியும் சோதனையை நடத்த விரும்புவதாக கூறி மத்திய புலனாய்வு அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வாதிட வாய்ப்புள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆனால் சோதனை நடத்தப்படும் நபர் அதற்கு சம்மதிக்கும்பட்சத்தில் தான் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடியும். எனவே சிபிஐ கோரிக்கை வைத்தாலும் ப.சிதம்பரம் ஒப்புக்கொண்டால் மட்டுமே இது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.