இந்தியாவில் இரண்டாம் அலையின் பாதிப்பு சீராகக் குறைந்து வரும் நிலையில் மூன்றாம் அலை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாகத் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை 88 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாகக் கடந்த 24 மணி நேரத்தில் 63,34,306 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அதே போன்று 2.77 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து வருகின்றனர். புதிய தொற்று எண்ணிக்கை கடந்த இரண்டு நாட்களாக 20 ஆயிரத்துக்கும் கீழாக இருந்து வந்த நிலையில், தற்போதும் மீண்டும் தொற்று எண்ணிக்கை 23,529 ஆக அதிகரித்துள்ளது. அதே போன்று பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டுள்ள கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 15,06,254 பரிசோதனைகளும், இந்தியா முழுவதும் மொத்தமாக 56,89,56,439 பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளது. தினசரி தொற்றுவிதிகம் கடந்த இரண்டு நாட்களை ஒப்பிடுகையில் தற்போது அதிகரித்துள்ளதால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அடுத்தடுத்து பண்டிகை வர இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதில் தெரிக்கப்பட்டுள்ளது.