இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், இந்திய மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள், ரெம்டெசிவர் மருந்துகள் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நிலமை மோசமாக இருப்பதையடுத்து,அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி சாதனங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை அனுப்பி உதவி வருகின்றன.
இந்தநிலையில் டெல்லியில் ரெம்டெசிவர் தட்டுப்பாடு தொடர்பான வழக்கு, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரெம்டெசிவர் தட்டுப்பாடு குறித்து மத்திய அரசு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால், ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டுமே அந்த மருந்தை வழங்கவேண்டும் என சிகிச்சை நடைமுறை மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
இதனையொட்டிய வாதங்களும் மத்திய அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டது. மத்திய அரசின் வாதத்தை கேட்ட நீதிபதி, நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் வழங்குவதற்கான நடைமுறையை மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்தார். இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மரணிக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது என எண்ணத் தோன்றுவதாக அவர் கூறினார். மேலும் நீதிபதி, ஆக்சிஜன் உதவியின்றி சிகிச்சை பெறுபவர்களுக்கு மருத்துவர்கள் அந்த மருந்தை பரிந்துரைக்காதபடி செய்வது முற்றிலும் தவறான நடவடிக்கை. மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டால், அதனை சரிசெய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமே தவிர பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதிக்க கூடாது எனவும் கூறினார்.