Skip to main content

‘ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன்’ - உச்ச நீதிமன்றம் அதிரடி

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Aam Aadmi MP Bail for Sanjay Singh
சஞ்சய் சிங் எம்.பி.

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். அதே சமயம், மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங்கின் டெல்லி வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து சஞ்சய் சிங், அமலாக்கத்துறையால் கைது (04.10.2024) செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து, அவர் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அதே சமயம் சஞ்சய் சிங் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (04.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் சிங்வி வாதிடுகையில், “அப்ரூவராக மாறியவரின் வாக்குமூலத்தை தவிர சஞ்சய் சிங்குக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை” எனத் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள், “ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யாமல், எந்த ஆதாரமும் இன்றி ஒருவரை 6 கடந்த ஆறு மாதங்களாக சிறையில் அடைத்து வைத்திருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், இந்த வழக்கில் பணம் எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நீங்கள் (அமலாக்கத்துறை) சஞ்சய் சிங்கை 6 மாதங்கள் நீதிமன்றக் காவலில் வைத்திருக்கிறீர்கள். அவருக்கு காவல் தேவையா? இல்லையா? என்பது குறித்து எங்களுக்குத் தெரிய வேண்டும்” என அமலாக்கத்துறையினருக்கு கேள்வி எழுப்பி இருந்தனர். அதனைத் தொடர்ந்து, “நாளை வரை அவகாசம் வழங்க வேண்டும்” என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

Aam Aadmi MP Bail for Sanjay Singh

இதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கை ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சஞ்சய் சிங்கின் வழக்கறிஞர் ரிஷிகேஷ் குமார் கூறுகையில், “சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மிகவும் ஆச்சரியமான விஷயம். ஏனெனில் அமலாக்கத்துறை அவர்களின் வழக்கிற்காக வாதிடவில்லை. சஞ்சய் சிங்கிற்கு எதிராக, அவருக்கு எதிராக வழக்குத் தொடுக்க நம்பத்தகுந்த எந்த ஆதாரமும் இல்லை என்று மதிய உணவிற்கு முன் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்” எனத் தெரிவித்தார். சஞ்சய் சிங்குக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறித்து அவரது தாயார் ராதிகா சிங் கூறுகையில், “நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதற்காக தான் காத்திருந்தோம். உச்ச நீதிமன்றத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். என் மகன் நிரபராதி. அவர் கைது செய்யப்பட்டிருக்கக்கூடாது. இருப்பினும் ஜாமீன் வழங்கப்பட்டதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது”எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்