மோடி அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேற்று மக்களவையில் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மக்களவை குழு துணைத் தலைவர் காங்கிரஸ் கௌரவ் கோகோய் எம்.பி. விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார்.
அதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் இந்த விவாதத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொண்டு பேசுகையில், “முதலில், என்னை மக்களவை உறுப்பினராக மீண்டும் அங்கீகரித்ததற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த முறை நான் பேசியபோது, அதானி விவகாரத்தில் கவனம் செலுத்தியதால் உங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கலாம். உங்கள் மூத்த தலைவர் இது குறித்து வேதனைப்பட்டார். அந்த வலி உங்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அப்போது நான் உண்மையை தான் சொன்னேன். இன்று என் பேச்சு அதானி பற்றியது இல்லை என்பதால் பாஜக நண்பர்கள் பயப்படத் தேவையில்லை.
சில நாட்களுக்கு முன்பு, நான் மணிப்பூர் சென்றேன். நமது பிரதமர் இன்று வரை அங்கு செல்லவில்லை, ஏனென்றால் அவருக்கு மணிப்பூர் இந்தியா அல்ல. ஆனால் இனி மணிப்பூர் இருக்காது என்பதே உண்மை. மணிப்பூரை இரண்டாகப் பிரித்து விட்டீர்கள். மணிப்பூரை பிரித்து உடைத்து விட்டீர்கள். மணிப்பூரில் இந்தியாவை கொன்றுவிட்டீர்கள்” என பேசினார். அப்போது ராஜஸ்தானுக்கு எப்போது செல்வீர்கள் என்று ராகுல் காந்தியிடம் ஆளும் கட்சி எம்.பி.க்கள் கேட்டபோது, "நான் இன்று செல்கிறேன்" என்றார்.