Skip to main content

ஆட்டத்தின் திக் திக் நிமிடங்கள்; டென்ஷன் ஆன ரசிகர்கள்! 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

south africa beat pakistan in world cup cricket

 

சென்னை, சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின் 26வது போட்டியில் தென் ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் நேற்று (27ம் தேதி) மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

 

இதில், அதிகபட்சமாக பாபர் அசாம் 65 பந்துகளில் 4 பவுண்டரிகள், 1 சிக்சர்கள் எடுத்து 50 ரன்கள் குவித்து அவுட்டானார். அதை தொடர்ந்து, செளத் ஷகீல் 52 பந்துகளில் 7 பவுண்டரிகள் அடித்து 52 ரன்களோடு அவுட்டானார். மேலும், தென் ஆப்பிரிக்கா அணி தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளையும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளையும், கைப்பற்றினர். 

 

இதனை தொடர்ந்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தெம்பா பவுமா 28 ரன்களையும், டி காக் 24 ரன்களையும் எடுத்து அவுட்டானார்கள். அடுத்தடுத்து வந்த தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர்கள் மிகவும் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில்,  நிதானமாக விளையாடிய மார்க்ரம் 91 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு  271 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இதில், பாகிஸ்தான் அணி தரப்பில் அப்ரிடி 3 விக்கெட்டுகளையும், முகமது வாசிம், உசாமா மிர் மற்றும் ஹரிஸ் ரஃப் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 

இந்த உலக கோப்பை லீக் போட்டியில் 6 முறை விளையாடிய பாகிஸ்தான் அணி 2 வெற்றியையும், 4 தோல்விகளையும் சந்தித்தது. கடந்த 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியோடி மோதிய ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து, பாகிஸ்தான் அணி குறித்து அந்த அணியின் முன்னால் நட்சத்திர வீரர் வாசிம் அக்ரம் தனது அதிருப்தியை வெளிபடுத்தியிருந்தார். அப்போது அவர், “பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஸ்குவாடுக்கு ஒரு வரலாறு உள்ளது. ஆனால் தற்போது அது பல் இல்லாத பாம்பு போல் உள்ளது. 

 

இரு விக்கெட்களை மட்டுமே இழந்து 280 ரன்களை எடுப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால், இதனை ஆஃப்கானிஸ்தான் அசால்டாக செய்திருக்கிறது. பிட்ச் ரிப்போர்ட்டை காரணம் சொல்ல முடியாது. வீரர்களின் ஃபிட்னஸ் மிகவும் முக்கியம். மூன்று வாரமாக நீங்கள் விளையாடவில்லை. நான் தனிப்பட்ட முறையில் வீரர்களின் பெயர்களைச் சொன்னால் அவர்களுக்கு முகம் வாடும். இவர்கள் தினமும் 8 கிலோ ஆட்டிறைச்சி சாப்பிடுவது போல் தற்போது இவர்களுக்கு எந்த சோதனையும் வேண்டாம். நீங்க உங்க நாட்டுக்காக விளையாடுறீங்க. தொழில் ரீதியாக நீங்கள் விளையாட பணம் பெறுகிறீர்கள்” என்று தெரிவித்திருந்தார். 

 

அவர் பேசிய கருத்து கிரிக்கெர் ரசிகர்கள் மிகவும் பேசுபொருளாக மாறியிருந்தது. மேலும், பாகிஸ்தான் அணி வீரர்கள் மத்தியில் கவலை அளித்திருந்தது. இந்த சூழலில், இந்த லீக் போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்று நோக்கத்தில் பாகிஸ்தான் அணி இறுதி வரை போராடியது. இருப்பினும், தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தனது 5வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த உலக கோப்பை தொடரில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியை காண ரசிகர்கள் பலரும் வந்து ஆரவாரம் செய்தனர். இதில் விளையாடிய, பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் என இரு அணிகளுக்கும் ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதரவை தந்தனர். இந்த சூழலில், எந்த அணி வெற்றி பெறும் என்று கடைசி நிமிடம் வரை ரசிகர்கள் பதட்டமாக இருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா அணி த்ரில் வெற்றி வெற்றுள்ளது. 


 

சார்ந்த செய்திகள்