குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெறக் கோரியும், மசோதாவை நிறைவேற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்தும் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நாடு முழுவதும் பல பகுதிகளில் வன்முறையும் நடந்தது. இதனையடுத்து பல மாநிலங்களில் இணைய சேவை முடக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்குவங்க பாஜக துணை தலைவர் சந்திரகுமார் போஸ், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், "குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு மதத்துடன் தொடர்புடையது இல்லை என்றால், ஏன் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் என பிரித்துப் பார்த்து கூறவேண்டும். அவர்களை போன்று இஸ்லாமியர்களை ஏன் இணைக்கவில்லை. எல்லாம் வெளிப்படையானதாகவே இருக்க வேண்டும். எல்லா மத, இன மக்களும் சமமான அளவில் நடத்தப்படும் மதசார்பற்ற நாடான இந்தியாவை மற்ற எந்தவொரு நாட்டுடனும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம்" என தெரிவித்துள்ளார். பாஜக தலைவர்களை அனைவரும் இந்த சட்டத்தை ஆதரித்து கருத்துக்கள் கூறிவரும் நிலையில், பாஜகவிலிருந்து முதல் எதிர்ப்பு குரல் தற்போது வந்துள்ளது.