சென்னையில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக முதலீட்டாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் அதானி குழுமம் தமிழகத்தில் மேலும் 12,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும். ஹூண்டாய் நிறுவனம் 7000 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விழாவில் பேசிய கரண் அதானி, 'பல்லவர், சோழர்கள் காலம் முதலே தொழில் வளர்ச்சியில் சிறந்து விளங்கிய மாநிலம் தமிழகம். அப்துல்கலாம், ராஜாஜி, ராதாகிருஷ்ணன், போன்ற பல தலைவர்களை வழங்கிய மாநிலம். அப்படிப்பட்ட தமிழகத்தில் காட்டுப்பள்ளி துறைமுகம், கமுதியில் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கும் பணிகள் ஆகியவற்றை அதானி குழுமம் செய்து வருகிறது. அதன் அடுத்தகட்டமாக தற்போது தமிழகத்தில் மேலும் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் முடிவு செய்துள்ளது' என கூறினார். அதனை தொடர்ந்து இந்தியாவின் 2-வது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக உள்ள ஹுண்டாய் கார் நிறுவனம் சென்னை இருங்காட்டுக்கோட்டையில் உள்ள இதன் ஆலையினை விரிவாக்கம் செய்து பேட்டரி கார் தயாரிப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.இதற்காக அந்நிறுவனம் நிறுவனம் ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்வதாகவும் அறிவித்துள்ளது.