Skip to main content

அம்ரித் பால் சிங்கை  கைது செய்ய தீவிரம்;  மக்களிடம் உதவி கேட்ட பஞ்சாப் போலீஸ்

Published on 21/03/2023 | Edited on 21/03/2023

 

punjab current situation incident police ig asked help from public

 

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் பால் சிங் என்பவர் 'வாரிஸ் பஞ்சாப் தே' என்ற அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பானது பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாபை பிரித்து தனி நாடாக அறிவிக்க கோரும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

 

கடந்த மாதம் பஞ்சாபின் ரூப்கர் மாவட்டம் சாம் கவுர் சாகிப் என்ற பகுதியைச் சேர்த்த பரிந்தர் சிங் என்பவரை கடத்திச் சென்று தாக்கியதாக அம்ரித் பால் சிங் உள்ளிட்ட மூவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரில் ஒருவரான லவ் ப்ரீத் சிங்க் என்பவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தபோது லவ் ப்ரீத் சிங்கை மீட்பதற்காக அம்ரித் பால் சிங் தலைமையில் தனது ஆதரவாளர்களுடன் அஜினாலா காவல் நிலையத்திற்கு வாள், துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் வந்து காவலர்களிடம் சண்டை போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து காவலர்கள் லவ் ப்ரீத் சிங்கை விடுவிப்பதாகக் கூறியுள்ளனர். மேலும் லவ் ப்ரீத் சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுவித்துள்ளனர்.

 

இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை, அம்ரித் பால் சிங் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை பஞ்சாப் போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில் அம்ரித் பால் சிங்கை கைது செய்ய முயன்றபோது போலீசாரின் பிடியிலிருந்து தப்பி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்படும் பதற்றத்தை தணிப்பதற்காக  சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் நேற்று நண்பகல் 12 மணி வரை என 24 மணி நேரத்திற்கு இணைய சேவை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் பதற்றமான சூழல் அங்கு நிலவுவதால் திங்கட்கிழமை நண்பகல் 12 மணி வரை இணைய சேவைகள் முடக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள நாகோர் காவல் நிலையத்தில் அம்ரித் பால் சிங்கின் மாமாவும் அவரின் கார் டிரைவரும் போலீசில் சரணடைந்தனர். இந்த தகவலை ஜலந்தர் ஊரக காவல்துறை உயரதிகாரியான ஸ்வாரந்தீப் சிங் உறுதி செய்திருந்தார்.

 

கடந்த ஒரு வாரமாக அம்ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்சாப் காவல்துறையினர்  தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தோற்றத்துடன் காணப்படும் அம்ரித் பால் சிங்கின் புகைப்படத்தை வெளியிட்டு கைது செய்ய போலீசாருக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் மாநில போலீஸ்  ஐஜி சுக்செயின் சிங் கில் கூறுகையில், "தற்போது போலீஸ் தரப்பில் வெளியிட்டுள்ள அம்ரித் பால் சிங்கின் பல்வேறு தோற்றத்தில் பல்வேறு உடைகளுடன் காணப்படும் புகைப்படத்தைக் கொண்டு, கைது செய்ய எங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்